புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது, இதில் 205 பேருக்கு முனைவர் பட்டமும், 17 பேருக்கு தங்கப் பதக்கமும் குடியரசு தலைவர் வழங்குவதாக இருந்தது.
இந்நிலையில் புதுவை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மூவர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர்.
இவர்களில் கேராளாவைச் சேர்ந்த கார்த்திகா என்ற மாணவி முதுகலை மின்னணு ஊடகவியலில் (Electronic Media) தங்கப் பதக்கத்தையும், புதுச்சேரியை சேர்ந்த மேகலா மற்றும் சென்னையை சேர்ந்த அருண்குமார் மானுடவியல் (Anthropogy) பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற இருந்தவர்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் குடியரசு தலைவர் வழங்கும் பட்டமளிப்பு விழாவை மேற்குறிப்பிட்டுள்ள மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். மேலும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் வருகையின் போது, பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து தங்கப்பதக்கம் பெற இருந்த ரபிஹா என்ற மாணவியை காவல்துறையினர் அரங்கத்தின் வெளியே அழைத்து, பின்னர் குடியரசு தலைவர் சென்ற பிறகு அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து ரபிஹா தனது தங்கப் பதக்கத்தை விழா மேடையில் வாங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டமளிப்பு விழாவில் பங்குபெறும் மாணவர்கள், பேராசிரியர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டும், விழாவில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்,
மேலும், புதுச்சேரியில் குடியரசு தலைவர் வருகையையொட்டி, புதுச்சேரி முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக வன்முறைகளும் போராட்டங்களும் நடைபெறாமல் இருக்க தீவிரமாக கண்காணித்தனர்.
குடியரசு தலைவர் வருகையின் போது வெளியேற்றப்பட்ட மாணவி ரபிஹா நடந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், "இன்று பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் வருகைக்கு சற்று முன்னர் முதுநிலை காவல்துறை கண்காணிப்பாளர் என்னிடம் பேசவேண்டும் என்று கூறி பட்டமளிப்பு அரங்குக்கு வெளியே அழைத்தனர்.''
''பின்னர் என்னை கொஞ்சம் காத்திருக்க சொல்லிவிட்டு அவர்கள் அரங்கின் கதவுகளை அடைத்துவிட்டனர். அதன் பிறகு குடியரசு தலைவர் அரங்கைவிட்டு சென்ற பின்னரே என்னை உள்ளே செல்ல அனுமதித்தனர். என்னை என்ன காரணத்திற்காக வெளியே அழைத்தனர் என்பது எனக்கு தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.
''ஆனால் இது எனக்கு இந்த நாளில் ஒரு தைரியத்தை கொடுத்தது, இருந்தாலும் எந்த பாகுபாட்டின் அடிப்படையில் என்னை வெளியேற்றினர் என்பது புரியவில்லை. அதனால் இதை எதிர்த்தும் மேலும் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்தும், உரிமைக்காக அமைதியான வழியில் போராடும் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தான் நான் இந்த தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தேன்," என தெரிவித்தார்.
குடியரசு தலைவர் பங்குபெற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து மாணவி ரபிஹாவை மட்டும் வெளியேற்றியது குறித்து விளக்கம் கேட்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொள்ள முயற்சித்த போது எங்களது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
இந்த மாணவியை வெளியேற்றியது குறித்து தனது பெயர் குறிப்பிட மறுத்த மற்றொரு காவல்துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட மாணவி இதற்கு முன்பு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு இருந்திருப்பதாகவும், அதனால் பாதுகாப்பு கருதி அவரை வெளியேற்றியதாகவும் தெரிவித்தார்.
குடியரசு தலைவர் வருகையின் போது, பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மானுடவியலில் முனைவர் பட்டம் பெற இருந்த மாணவர்கள் மேகலா மற்றும் அருண்குமார், இது குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், "கடந்த ஒரு வார காலமாகவே நாங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகிறோம்'' என்று கூறினர்.
"எங்களை போன்று நாடு முழுவதும் மாணவர்கள் போராடி வருகின்றனர் ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் எங்களை பெரிதும் பாதித்தது."
"இதனை கண்டித்து எங்களது எதிர்ப்பை மத்திய அரசிற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் மூலம் தெரிவித்தோம். அதன் தொடர்ச்சியாக குடியரசு தலைவர் பங்குபெறும் பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதன் மூலம், மத்திய அரசிற்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மீதான எங்களது எதிர்ப்பை தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இவ்விழாவினை புறக்கணித்தோம். மேலும் இந்த சட்டம் அமலாவதற்கு கையெழுத்திட்டவர் குடியரசு தலைவர். அதன் அடிப்படையில் அவரது கையால் பட்டம் வாங்குவது வேண்டாம் என்று புறக்கணித்தோம்," என தெரிவித்தனர்.பிபிசி