எதிர்கட்சி பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு வழங்கியமையையிட்டு நாங்கள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலை பிரதேசத்தில் வைத்து 07.12.2019 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு கொடுத்து இந்த ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால நலன் கருதி வழிநடத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்கி தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
கடந்த 25 வருட காலங்கள் ரணில் விக்கிரமசிங்க இந்த கட்சியை வழிநடத்தி வந்தாலும், இந்த கட்சியினுடைய முன்னேற்றகரமான செயல்களை செய்வதற்கு தவறி இருந்தார் என்பது தான் உண்மையான கருத்து.
ஏனென்றால் ஒவ்வொரு தேர்தல்களிலும் பின்னடைவை சந்திக்க கூடிய நிலையிலேயே இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
தேர்தல் காலங்களில் மக்களுடைய விருப்பத்தை பொறுத்து எங்களுடைய முடிவை தெரிவிப்போம்.
அத்தோடு, தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபா கிடைத்தால் மிக வரவேற்க கூடிய ஒரு விடயம். இன்று இந்த நாட்டினுடைய ஜனாதிபதி பல்வேறு விடயங்களை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றார்.
விசேடமாக வரிகள் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளார். மக்களுக்கு சிறந்த சேவைகளை செய்ய கூடிய வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதேபோல் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்திலும் அக்கறை காட்டி ஆயிரம் ரூபா சம்பளம் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.