கடந்த தினங்களில் பெய்த பெருமழை காரணமாக வீடுகள், வீதிகள் என வெள்ளத்தில் மூழ்கியிருந்ததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். கல்முனை மாநகரசபை எல்லைக்குள் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த கல்முனை மாநகரசபையின் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையிலான குழுவினர் பாரிய முன்னெடுப்புகளை செய்திருந்தனர்.
இந்த அடிப்படையில் சாய்ந்தமருது பிரதேசத்திலும் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுருந்தன.அந்த வகையில் சாய்ந்தமருதில் வெள்ளநீரை வெளியேற்றும் பிரதான வடிகானான தோணாவில் உள்ள சல்பீனியா மற்றும் கழிவுகளை அகற்றும் பணிகள் 2019.12.07 ஆம் திகதி ஆரம்பாமானது.
சாய்ந்தமருது தோணா பாரிய அபிவிருத்தித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு, ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்ற நிலையில் பின்னர் அபிவிருத்திப்பணிகள் கைவிடப்பட்டிருந்தன. இதன் காரணமாக குறித்த தோணா கவனிப்பாரற்று கழிவுகளை கொட்டும் இடமாக மாறியிருந்தது.
தொடர் மழையின் காரணமாக தோணாவின் தேவை உணரப்பட்டு அதில் காணப்படும் தடைகளை மட்டும் அகற்றும் பணி இடம்பெற்று வருகின்றது.
குறித்த பணிகளை ஆரம்பிக்க கல்முனை மாநகரசபை முதல்வர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம்.றிகாஸ் ஆகியோர் அனர்த்த முகாமைத்துவ சபையிடம் கேட்டுக்கொண்டதற்கினங்க அமபாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ சபையின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் அவர்களது முயச்சியால் மூன்று லட்சம் ரூபாய்கள் கிடைத்திருந்தது. குறித்த பணம் தோணாவில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கு மட்டும் பாவிக்கப்படுவதாகவும் அகற்றப்படும் கழிவுகளை அப்புறப்படுத்த கல்முனை மாநகரசபை வாகனங்கள் மற்றும் டீசல்லுக்கு என அண்ணளவாக இன்னும் மூன்று லட்சம் ரூபாய்கள் வரை செலவிட நேரிடலாம் என இங்கு கருத்துத் தெரிவித்த முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் தெரிவித்தார்.
எவ்வளவுதான் பணங்களை செலவழித்து இவ்வாறான பணிகளை மேற் கொன்டாலும் சுத்தப்படுத்திய பிரதேசங்களை மக்கள் சரியான முறையில் கையாளாது விட்டால் செலவிடப்படும் பணம் வீணாவதுடன் கழிவுகள் தேங்கிக்கிடப்பதனால் சுற்றாடல் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக தான் அறிவதாகவும் அவற்றின் சொந்தக்காரர்கள் சரியான முறையில் அவற்றை கையாளாது விடுவதனால் சூழலுக்கு ஆபத்து எற்படுவதாகவும் அவர்கள் விரைந்து தங்களது கட்டாக்காலிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைக்காது விட்டால் அவற்றை பிடித்துச் செல்ல நேரிடும் என்றும் தெரிவித்தார்.
தோணா சுத்தப்படுத்தும் பணிகளை களத்தில் நின்று ஆலோசனைகளை வழங்கிக் கொண்டு முதல்வர் றக்கீப் அவர்கள் காணப்பட்டார். மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் அவர்களது பங்களிப்பும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
இதேவேளை பணிகள் ஆரம்பிக்கப்படும் வேளை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர் எம்.ஜௌபர் கல்முனை மாநகரசபை உத்தியோகத்தர் யூ.கே.காலித்தீன் ஒப்பந்தக்காரர் ஏ.எல்.ஏ.நாஸர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.