கல்முனையின் வடக்கு எல்லையை உறுதி செய்து, காப்பாற்றுவதற்கு உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் டிசம்பர் மாதத்திற்கான பொதுச் சபை அமர்வில் கல்முனை வடக்கு எல்லை சர்ச்சை குறித்து பிரஸ்தாபித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் அவர் உறுப்பினர் குபேரன் மேலும் தெரிவிக்கையில்;
"எமது கல்முனை மாநகர சபையினதும் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையினதும் ஆள்புல எல்லை என்பது பெரிய நீலாவணையையும் கல்லாறையும் ஊடறுத்து செல்கின்ற கார்ட் ரோட் வீதியாகும். கல்முனையின் இந்த வடக்கு எல்லையை மூன்று வர்த்தமானிகள் உறுதிப்படுத்துகின்றன. அனால் எமது மாநகர சபையின் திண்மக்கழிவகற்றும் வாகனங்கள் அந்த வீதியால் செல்ல முடியாது என தடுக்கப்படுகிறோம்.
இந்நிலையில் அதற்காக மாற்றுப் பாதையை பயன்படுத்துகிறோம் என்றால் எமது கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லையை நாமே விட்டுக்கொடுப்பதாக அமைந்து விடும். எமது எல்லையை நாமே பாதுகாக்க வேண்டும். அதனை வேறு எவரும் கபளீகரம் செய்வதற்கு எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கக் கூடாது.
ஆகையினால் கல்முனையின் வடக்கு ஆள்புல எல்லை கார் ரோட் வீதிதான் என்பதற்கான சட்டபூர்வ ஆவணங்கள் எம்மிடம் உள்ள நிலையில் மேலும் தாமதிக்காமல் நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தாக்கல் செய்து அந்த எல்லையை உறுதி செய்வதற்கு முதல்வர் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.