காரைதீவு சகா-
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இதுவரைகாலமும் நடாத்தப்பட்டுவந்த தகவல்தொழினுட்ப தொடர்பாடல் கணணிப் பயிற்சி நெறி நிறுத்தப்பட்டிருப்பதையிட்டு மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அடுத்தாண்டுக்கான பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பம் கோருகையில் இப்பாடநெறி உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால்மாவட்டத்தில் ஏனைய பயிற்சிநிலையங்களில் இத்தகைய நெறி நிறுத்தப்படவில்லை.
இதனால் இப்பாடநெறியைப்பயிலவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பல மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் காரைதீவு பிரதேசசெயலாளர் மற்றும் பிரதேசசபைத்தவிசாளர் ஆகியோரிடம் சென்றுபுகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்மையில் நடைபெற்ற புதிய அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
அங்கு காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் தமிழில் பிரஸ்தாபிக்கையில்:
காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இதுவரைகாலமும் நடாத்தப்பட்டுவந்த கணனிப்பயிற்சிநெறிக்கு இம்முறை விண்ணப்பம் கோரப்படவில்லை. கேட்டால் அதற்கான ஆசிரியர் இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறதாம் என்று அதற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்கள் பலர் என்னிடம்வந்து முறையிட்டுள்ளனர். ஒரு ஆசிரியர் அல்லது அதிபர் இறந்தால் அப்பாடசாலையை மூடிவிடுவதா? இதுதிட்டமிட்டு நடைபெற்றுள்ளதா என சந்தேகிக்கவேண்டியுள்ளது.கணணி இல்லாமல் எதிர்காலம் இல்லை என்கிறாக்கள்.ஆனால் இங்கு எல்லாம் தலைகீழ். இதற்கு தீர்வைத்தாருங்கள் என்றார்.
உடனே குழுத்தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறியாணி விஜேவிக்ரம தலையிட்டு தொழி;ற்பயிற்சி நிலைய அதிகாரசபை பிரதிப்பணிப்பாளரை அழைத்தார். அவர் வருகைதரவில்லை. அவரை ஒருவாரகாலத்துள் இதற்கான பதிலைத் தருவதோடு அங்கு பயிற்சிநெறியை தொடர்ந்து நடாத்த அவரை நடவடிக்கை எடுக்குமாறு அரசஅதிபரிடம் உத்தரவிட்டார்.
இதேவேளை இச்சபைக்குப்பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் நளிமிடம் கேட்டபோது 'இது கொழும்பில் பணிப்பாளர் எடுத்தமுடிவு. எங்களுக்கும்இதற்கும் தொடர்பில்லை. இபப்யிற்சிநெறி மற்றும் ரெயிலறிங் நெறி என்பவற்றை நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளதாம்' என்றார்.