எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு விபத்து தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (22) வாழைச்சேனை பொலிஸ் நிலைய கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.
இதில் மீராவோடை, செம்மண்ணோடை, பதுரியாநகர், மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் முச்சக்கர வண்டி செலுத்தும் சாரதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸார் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் போக்குவரத்து விதிமுறைகள், போக்குவரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், வாகனங்களை செலுத்தும் மற்றும் நிறுத்தும் முறைகள் பொன்றவைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதோடு நாட்டில் இடம்பெற்ற கோரவிபத்து தொடர்பான ஒளிப்பதிவு காட்சிகளும் வருகை தந்த சாரதிகளுக்கு காண்பிக்கப்பட்டன. அத்தோடு சாரதிகளினால் போக்குவரத்து மற்றும் தண்டப்பணம் தொடர்பாக கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பொலிஸ் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இதில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் அதிகாரி டபிள்யூ. பீ.எஸ்.பத்திரன, பொலிஸ் உத்தியோகத்தர் எம்.நியாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டு சாரதிகளுக்கு விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.