ஒழுக்கமில்லாத கல்வியும், பதவியும் நம் சமூகத்திற்கு தேவையில்லை என்று கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல். அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் பதுரியா நகர் அஸ் - ஸபா பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
ஒழுக்கம் இல்லாதவர்களிடத்தில் கல்வி, பதவி பட்டம் போன்றவை உள்ளதோ அவர்களிடத்தில் இந்த சமூகத்திற்கு எவ்விதமான ஆக்கபூர்வமான நன்மைகளும் கிடையாது. அத்தோடு ஒழுக்கம் இல்லாதவர்களிடத்தில் கிடைக்கும் பட்டம் பதவியானது அந்த இடத்தில் ஊழல்களையும், இலஞ்சங்களையும், நிர்வாக சீர்கேடுகளையும் கொண்டு வரும்.
ஆகவே சிறுவயதில் இருக்கின்ற பிள்ளைகளுக்கு ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்வியை கட்டாயம் நாம் இப்போதிருந்தே போதிக்க வேண்டும். சிலர் சொல்வார்கள் வைத்தியராக, பொறியியலாளராக, அரசியல்வாதிகளாக, நல்ல உயர் பதிவிகளில் உங்களது பிள்ளைகள் வரவேண்டும் என்று ஆனால் நான் அவ்வாறு சொல்வதில்லை நான் சொல்வது ஒழுக்கத்துடன் சேர்ந்த கல்விதான் எமக்கு வேண்டும் என்று தெரிவித்தார்.
அதுபோல் எமது பிரதேசத்தை நாங்கள் சுத்தமான பிரதேசமாக உருவாக்க வேண்டும் அதனூடாக விபரீதமான நோய்களில் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக எந்த இடத்தில் குப்பைகளை போட வேண்டும் என்பதனையும் நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் அத்தோடு பாதைகளை கடக்கும் போது நாம் எவ்வாறு செல்ல வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும் இது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடமை என்பதனை நான் இந்த இடத்தில் கூற விரும்புகின்றேன் என்றார்.