72 பயனாளிகளுக்கு சூரிய மின்கலங்கள் வழங்கி வைப்பு
ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி என்கிற மனித நேய ஸ்தாபனத்தால் ரி. தர்மேந்திரா தலைமையிலான தமிழர் ஊடக மையம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய காரைதீவை சேர்ந்த 72 வறிய மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு சூரிய மின்கலங்கள் நேற்று சனிக்கிழமை காலை வழங்கி வைக்கப்பட்டன.
இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி மனித நேய ஸ்தாபனத்தின் பிரதிநிதிகளாக கொழும்பில் இருந்து அஜித் கூரே, செல்வராஜன் இராஜேந்திரன், கீர்த்தி அத்தநாயக்க ஆகியோர் வருகை தந்து காரைதீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் வைத்து பயனாளிகளுக்கு இவற்றை கையளித்தார்கள்.
காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம், கிராம சேவையாளர்களான கிருஷ்ணபிள்ளை விஷ்வரதன் மற்றும் எஸ். நிஷாந்தினி, தமிழர் ஊடக மையத்தின் முக்கியஸ்தர்களான எஸ். நாகராசா, இ. கோபாலசிங்கம், எஸ். கஜரூபன் மற்றும் இ. சுதாகரன் ஆகியோர் இணைந்து இவற்றை கையளித்து வைத்தனர்.
பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன் உரையாற்றியபோது காரைதீவை சேர்ந்த மின்சார தேவை உடைய ஒரு தொகை பயனாளிகளுக்கு கிடைக்க பெறுகின்ற இந்த உதவி மகத்தானது, குறிப்பாக வறுமை மற்றும் வசதியீனம் காரணமாக மின் இணைப்பு பெற முடியாத குடும்பங்களுக்கு இது பேருதவியாக உள்ளது, ஊடகவியலாளர் தர்மேந்திரா, பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் பூபாலரட்ணம் ஆகியோர் அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி மனித நேய எஸ்தாபனத்திடம் இருந்த இந்த உதவிகள் கிடைக்க பெறுவதற்கு வழி அமைத்து கொடுத்தனர், எமது பயனாளிகள் இவ்வுதவிகளின் உச்ச பலன்களை பெற வேண்டும் என்றார்.
இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி மனித நேய ஸ்தாபனத்தின் பிரதிநிதி அஜித் கூரே உரையாற்றியபோது மின்சார தேவை உடைய குடும்பங்களுக்கு குறிப்பாக படிக்கின்ற பிள்ளைகளுக்கு நாம் இவ்வாறான உதவிகளை நாடு பூராவும் வழங்கி வருகின்றோம், ஆஸ்திரேலியாவில் தொழில் புரிகின்ற இலங்கையர்க்ள் சிறுக சிறுக சேமித்து தருகின்ற பணத்திலேயே எம்மால் இவ்வுதவிகளை செய்து தர முடிகின்றது, நாம் எவ்வித இலாப நோக்கத்துக்காகவோ, பிரசித்திக்காகவோ, வாக்கு கேட்பதற்காகவோ இவற்றை செய்யவில்லை, எனவே இவற்றின் உச்ச பலனை பலனை பெற்று எமது உதவிகளை நீங்கள் அர்த்தம் உள்ளவை ஆக்குதல் வேண்டும் என்றார்.