மஸ்கெலியா வைத்தியசாலையில் அதிகளவு ஆளனி பற்றாக்குறை காரணமாகவும், வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள், மருந்தகர், அம்புலண்ஸ் வண்டி மற்றும் சாரதிகள் பற்றாக்குறை காரணமாகவும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும் மஸ்கெலியா பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் சிலர் வைத்தியசாலைக்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 19.12.2019 அன்று ஈடுப்படனர்.
மஸ்கெலியா பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலங்களில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், சிகிச்சைக்கென வந்தவர்களும், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
எனவே நாட்டின் ஜனாதிபதியும், சுகாதார அமைச்சரும், மத்திய மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்