முன்னாள் அமைச்சர் சம்பிக்கவுக்கு எதிரான கைது வேட்டையானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையென சுட்டிக்காட்டியுள்ள வேலுகுமார் எம்.பி., அதனை வன்மையாகக் கண்டித்து இன்று (19.12.2019) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ சம்பிக்க ரணவக்க குற்றமிழைத்திருந்தால் அவருக்கு எதிராக உரிய வகையில், உரிய நடைமுறைகளை பின்பற்றியே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.அவ்வாறு நடைபெற்றிருந்தால் அதில் எவரும் தலையிட்டிருக்கமாட்டார்கள்.
எனினும், ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்ச தரப்பை கடுமையாக விமர்சித்த சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையிலேயே கைது வேட்டை அரங்கேற்றப்பட்டுள்ளது. அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் கைது செய்வதாக இருந்தால் முன்கூட்டியேசபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும்,நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் அடாவடிதனமாகவே காவல்துறையினரை ஏவிவிட்டு சம்பிக்க பழிதீர்க்கப்பட்டுள்ளார்.
இந்த ஜனநாயக விரோத – அரச அடக்குமுறை செயற்பாட்டை வன்மையாகக்கண்டிப்பதுடன், இதற்கு எதிராக அறவழியில் போராட்டங்களை முன்னெடுப்போம்.
மஹிந்த ஆட்சிகாலத்தில் உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருந்த ஜனநாயகத்தை 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமே பாதுகாத்து – புத்துயிர் கொடுத்தது. அத்துடன், சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு, கொடூங்கோல் ஆட்சிக்குபதிலாக – மக்களாட்சி நடத்தப்பட்டது.நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்பட்டது.
எமது ஆட்சிகாலத்தில் கைது நடவடிக்கைகள்கூட சட்டத்தின்பிரகாரமே இடம்பெற்றது. அரசியல் அழுத்தங்கள் இருக்கவில்லை. கோட்டாபயவின் அரசாங்கம் இன்று செய்வதை நாம் அன்று செய்திருந்தால் மஹிந்த அணியிலுள்ள பலர் இன்றும் சிறைச்சாலைக்குள்தான் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
எவராவது குற்றம் இழைத்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். நாம் அதற்கு எதிரானவர்கள் அல்லர். சட்டம், ஒழுங்கை மதிக்கின்றோம். எனினும், அவை உரிய வகையில் இடம்பெறவேண்டும்.
எனவே, பழிவாங்கல் அரசியலை கைவிடுத்து, நல்லாட்சியால் நிலைநாட்டப்பட்ட சட்டத்தின் ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு புதிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆனால், மீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்தி இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கவே ராஜபக்ச தரப்பு முயற்சிக்கின்றது என்பதையே அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துகாட்டுகின்றன. சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவைபெற்ற சம்பிக்ககைது செய்யப்பட்டதுகூட இதன் ஓர் அங்கமாகவே பார்க்கவேண்டியுள்ளது.” என்றுள்ளது.