இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் கல்முனை மாநகர வாழ் அனைத்து கிறிஸ்தவ சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இஸ்லாமியர்களினால் ஈஸா (அலை) என்று அழைக்கப்படுகின்ற இறை தூதரான இயேசு பிரான் அவர்கள் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று உலகம் பூராகவும் பரந்து வாழ்கின்ற கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் பெத்லகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில் இயேசு பிரான் அவர்கள் இதேபோன்றதொரு நாளில் பிறந்து, புனிதராக வாழ்ந்தது மட்டுமல்லாமல் அக்காலத்து சமூகத்தினரை நல்வழிப்படுத்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். இவ்வுலகில் பிறக்கின்ற எந்தவொரு மனிதனும் ஈடேற்றம் பெறாமல் நஷ்டமடைந்து விடக்கூடாது என்பதில் அவர் அவாக்கொண்டிருந்தார்.
அத்தகையதொரு இறை தூதரின் பிறந்த தினத்தையே எமது கிறிஸ்தவ சகோதரர்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். இத்தினத்தில் கல்முனை மாநகர வாழ் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் எமது மாநகர சபையின் சார்பில் மீண்டுமொரு முறை இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். அனைவரதும் எதிர்காலம் சுபிட்சமாக அமையட்டும்.