கல்முனை உப பிரதேச செயலகத்தை தர முயர்த்தாவிடின் ஜனாதிபதி கோட்டாவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோம் என பா. உ உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்த கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டித்திருப்பதுடன் அவ்வாறு நடைபெற்றால் கோடீஸ்வரனுக்கெதிராக நாம் கல்முனை மக்களை ஒன்று சேர்த்து நாம் சத்தியாகிரகம் செய்வோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாவுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போது உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
கல்முனை உப செயலகம் என்பது துப்பாக்கிமுணையில் கள்ளத்தனமாக பெறப்பட்டதாகும். இதனை ரத்துச்செய்ய கோரி நீதிமன்றத்தில் நசீர் ஹாஜி என்பவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு வராமல் கோடீஸ்வரன் போன்ற புலிகளின் கையாட்கள் அரசை அச்சுறுத்துவதன் மூலம் இதனை தர முயர்த்த நினைக்கிறார்கள். இந்த காட்டு கூச்சல்களுக்கு பயந்த அரசு அல்ல பொதுஜன பெரமுன அரசு.
கல்முனையில் தற்போதும் இருப்பது ஒரேயொரு தமிழ் பேசும் செயலகமாகும். கல்முனையில் இருக்கும் 30 வீத தமிழ் மக்களுக்கு தனி பிரதேச செயலகமும் பிரதேச சபையும் தேவை என்றால் 40 வீத முஸ்லிம்களை அடார்த்தாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளியை பிரித்து அதற்கென தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டும். அதே போல் நாவிதன் வெளியில் உள்ள 40 வீத முஸ்லிம்களுக்கும் தனியான செயலகமும் சபையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உலமா கட்சி முன் வைக்கிறது.
கோடீஸ்வரனின் அச்சுறுத்தலுக்கு பயப்படக்கூடிய முதுகெலும்பற்ற ஜனாதிபதியை, பிரதமரை நாம் கொண்டு வரவில்லை. சட்டத்துக்கு கட்டுப்பட்டு சகல மக்களையும் சமமாக பார்க்கும் மிகச்சிறந்த ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவை நாம் சிங்கள மக்களின் பெரும்பான்மையுடன் இணைந்து கொண்டு வந்துள்ளோம். அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து அச்சுறுத்தி கல்முனை பிரதேச செயலகத்தை தர முயர்த்த முணையும் கோடீஸ்வரன் நிச்சயம் ஒரு மனநோயாளியாகத்தான் இருக்க வேண்டும்.
சட்டத்துக்கு முரணாக உருவாக்கப்பட்டுள்ள கல்முனை உப செயலகம் ரத்து செய்யப்பட்டு கல்முனையில் வாழும் தமிழ் மக்களுக்காக பாண்டிருப்பு செயலகம் வழங்கலாம் என்பதே உலமா கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும் என குறிப்பிட்டார்.