எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் எமது அலுவலகத்தினால் விநியோகம் செய்யப்பட்ட கையெடுகள் பாரிய சட்ட சிக்கல்களை உண்டு பண்ணும் என்பதுடன் யாராவது ஒருவர் அந்த கையேட்டை ஆதாரமாக கொண்டு நீதிமன்றத்தை நாடினால் அவர் தோல்வியை சந்திப்பார் என அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.டி. எம். ராபி தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் நூலகங்கள் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்திய தேசிய வாசிப்பு மாத போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாத் தலைமையில் இன்று (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
புதிய முகங்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களாக தெரிவானதால் உள்ளுராட்சி மன்ற சட்டங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற விடயங்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் 1987ஆம் ஆண்டின்15ஆம் இலக்க பிரதேச சபை சட்டம் தொடர்பிலான புத்தம் ஒன்றை நாங்கள் வெளியிட்டிருந்தோம். அந்த புத்தகத்தில் 20க்கும் மேற்பட்ட பிழைகள் இருக்கிறது. அந்த புத்தகங்களை திரும்ப பெற வேண்டும் என அமைச்சுக்கு அறிவித்துள்ளேன். இதனை வரும் வாரங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கு அறிவிக்க உள்ளேன். பழைய கையெடுகளை பாவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்.
புத்தகம் எழுதுபவர்கள் விடுகின்ற பிழை ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி விடுகின்றது. வியாபார நோக்கம் கருதி எழுத்தப்படுகின்ற புத்தகங்கள் நிறைய பிரச்சினைகளை உருவாக்கிறது. பிள்ளைகள் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க முன்னர் பெற்றோர் அந்த புத்தகத்தை நன்றாக வாசிக்க வேண்டும்.
வயதுக்கு ஏற்ற புத்தகங்கள் எமது பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டால் மாத்திரமே அவர்களால் அழுப்பில்லாமல் படிப்பில் கவனம் செலுத்த முடியும். சரியான விடயங்கள் சரியான முறையில் அமுல்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறு செய்ய தவறியதால் அண்மையில் பள்ளிவாசல் முன்றலில் வரையப்பட்டு பாரிய விவாத பொருளாக மாறிய சுவரோவியம் இருந்தது என்றார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, உப தவிசாளர் வி. ஜெயச்சந்திரன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல். அப்துல் மஜீத், உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.