பாடசாலையினை விட்டு வெளியேறிய இளைஞர்களை கொண்டியங்கும் அல் இஸ்லாஹ் சமூக சேவைகள் அமைப்பானது படித்த இளைஞர்களுக்கு சகல விதத்திலும் முன்மாதிரியான அமைப்பாக கல்குடாவில் செயற்பட்டு வருகின்றமையானது எல்லோரினதும் கவனத்தில் கொள்ளப்பட்ட விடயமாக மாறியுள்ளது.
அந்த வகையில் குறித்த அமைப்பினால் வருடாந்தம் நடைபெறும் பொருளாதார நெருக்கடியை முகம் கொடுக்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த (15.12.2019) ஞாயிற்றுகிழமை ஓட்டமாவடி தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் அமைப்பின் தலைவர் M.அனீஸ் அஹமட் தலைமையில் நடைபெற்றது..
கல்குடா பிரதேசத்தில் இனம் காணப்பட்ட 10 பாடசாலைகளில் முதற்கட்டமாக 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு சுமார் 70 மாணவர்களுக்கு அப்பியாச கோப்பிகள், கற்றல் உபகரணங்கள், பாடசாலை புத்தகப்பை அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது..
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைபற்று மேற்கு பிரதேச செயலக சமூக சேவைகள் அதிகாரி ஜெயசேகர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்..மேலும் சிறப்பு அதிதியாக கல்குடா ஜம்மியதுல் உலமாவின் உப செயலாளரும் பிறைந்துரைசேனை அஸ்கர் வித்தியாலய ஆசிரியருமான AM.அன்சார்(சிராஜி) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..