ஆனால், மாணவர்களில் பலருக்கு தான் என்னவாக ஆகவேண்டும் என்ற குழப்பம் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. என்ன படிக்க வேண்டும், எந்தப் படிப்பை தேர்வு செய்தால், எனக்கு பெயரும் புகழும் கிடைக்கும் என்ற கேள்விகள் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். ‘யாராவது ஒருவர் எனக்கு வழிகாட்டினால் போதும். அப்புறம் நான் பெரிய ஆளாகிவிடுவேன்’ என்று நினைப்பார்கள். ஆனால், அந்த ஒருவர் யார் என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருக்கும். கவலைப்படாதீர்கள் அந்த ஒருவராய் உங்கள் ஆசைக்கு விதையாக இனி ‘அறம்’ இருக்கும்.
இந்தப் பகுதியில் ‘அறம்’ இதழ் ஒரு படிப்பை அறிமுகப்படுத்துவதுடன், அந்தப் படிப்புக்கான மதிப்பு, மரியாதை, வேலைவாய்ப்புகள், ஊதிய விவரங்கள் இப்படி எல்லாமுமே பட்டியலிடும். இந்த விவரங்களை எல்லாம் படித்துவிட்டு, இந்தப் படிப்பு மாணவர்கள் தங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் கைக்கொடுக்கும் என்று தோன்றினால், இன்றிலிருந்து இந்தப் படிப்பை கனவுப்படிப்பாக மனதில் உறு ஏற்றுங்கள். அதற்கான தேடலை இன்றிலிருந்தே தொடங்குங்கள். ஏனெனில் மாற்றம் என்பது காலத்தின் கையில் உள்ளது. நல்ல மாற்றம் என்பது நம் கையில்தான் உள்ளது. உங்களது வாழ்க்கை எதிர்காலத்தில் நல்ல மாற்றத்தை சந்திக்கவேண்டுமென்றால் இன்றிலிருந்தே அதற்கான தேடலை தொடங்கிவிடுங்கள்.
இந்த மாத கனவுப் படிப்பு : இதழியல்
சரித்திரத்தை மாற்றும் அத்தனை வல்லமையும் பேனா முனைக்கு உண்டு என்பதை வரலாறு பல இடங்களில் நமக்கு சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்த வரலாற்றை புரட்டிப்போடும் ஆயுதமாக உங்கள் பேனாவும் இருக்க வேண்டுமா? இதழியல் படியுங்கள்.
இதழியல் என்பது என்ன?
பத்திரிகைத் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வமும், நாட்டின் தலையெழுத்தை தன் பேனா முனையே மாற்ற வேண்டும் என்ற துடிப்பும் உள்ளதென்றால் நீங்கள் இதழியல் படிப்பை தேர்வு செய்தாக வேண்டும். ஆங்கிலத்தில் இதை ‘ஜர்னலிசம்’ என்பார்கள். மருத்துவம் படிப்பு படித்தவர்களை டாக்டர் என்றும், பொறியியல் படிப்பை படித்தவர்களை என்ஜினியர் என்றும் அழைப்பதுபோல், இதழியல் படிப்பில் கைதேர்ந்தவர்களை ‘ஜர்னலிஸ்ட்’ என்பார்கள். மருத்துவம், பொறியியல், இதழியல் இந்த மூன்று படிப்புக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன தெரியுமா இந்த மூன்றுமே தொழிற் படிப்புகள். ஆங்கிலத்தில் இதை புரபஷனல் கோர்ஸ் என்பார்கள். ஏனெனில் இந்த மூன்று படிப்பும், படித்த முடித்த கையோடு ஏதேனும் பணியில் சேர்ந்துவிடலாம். அல்லது சொந்தமாக தொழில் தொடங்கி பத்து பேருக்கு வேலை கொடுக்கலாம்.
இதழியல் படித்தால்தான் பத்திரிகையில் பணி கிடைக்குமா?
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை பத்திரிகை துறையில் பணியில் சேர வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை படித்திருந்தால் போதும். இதுதான் படித்திருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், தற்போது பத்திரிகைத் துறையில் பணிக்குச் சேர வேண்டுமென்றால், இதழியல் படிப்பு என்பதை பல பத்திரிகை நிறுவனங்கள் கட்டாயப்படுத்தியிருக்கிறது.
இதழியல் படிப்புக்கு அடிப்படை தகுதி என்ன?
பிளஸ் டூ வகுப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அதன்பிறகு விஷுவல் கம்யூனிகேஷன், இதழியல், ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட ஏதேனும் ஒரு படிப்பில் இள நிலைப் பட்டப் படிப்பில் சேரலாம். ஒருவேளை பட்டப் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்துவிட்ட மாணவர்கள், முது நிலைப் பட்டப் படிப்பில் இதழியலை தேர்வு செய்து படிக்கலாம். இதழியல் படிப்பை பொறுத்தவரையில் டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளையும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கற்றுக்கொடுக்கின்றன.
ஆனால், பத்திரிகைத் துறையை பொறுத்தவரையில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் இதழியல் படிப்பை விரும்புவதில்லை என்பதையும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
புகழ்பெற்ற சில கல்லூரிகளில் இதழியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வையும் நடத்துகிறது.
வேலைவாய்ப்பு எப்படியிருக்கிறது?
20 ஆண்டுகளுக்கு முன்புவரை விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கே பத்திரிகை நிறுவனங்கள் உண்டு. ஆனால், இன்றோ மூன்று இலக்க எண்கள் அளவிற்கு பத்திரிகை நிறுவனங்கள் தமிழகத்தில் பெருகியிருக்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், திறமையான எழுத்தாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் தினம் தினம் பத்திரிகை துறையில் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். திறமைக்கேற்ற ஊதியம் இந்தத் துறையில் உண்டு. குறைந்தபட்சம் மாதம் ரூ.15,000 ஆரம்பித்து ரூ.3 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
நவ நாகரிக இதழியல்:
கடந்த காலங்களில் இதழியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது செய்தித்தாள், அல்லது தொலைக்காட்சி என்பதில் மட்டுமே இருந்தது. ஆனால், இன்றைய நவ நாகரிக உலகத்தில் செய்தித்தாள், தொலைக்காட்சியைக் கடந்து முக நூல், இணையதளம், பிளாக், வாட்ஸப், யூ டியூப் என்ற பலதரப்பட்ட தளங்கள் இருக்கிறது. உங்களுடைய திறமையை நிரூபிக்க இன்னொருவர் வாய்ப்புத் தந்தால்தான் உண்டு என்ற நிலை தற்கால இதழியல் மாணவர்களுக்கு இல்லை, படிக்கும்போதே உங்களுடைய திறமையை மேற்கண்ட வெவ்வேறு ஊடகங்கள் மூலம் உலகுக்கு வெளிக்காட்டிக்கொண்டே இருக்க முடியும். உங்கள் திறமையை வெளிக்காட்டும் அதே நேரத்தில் படிக்கும்போது கணிசமாக வருமானமும் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன பிரிவுகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது?
மருத்துவத்துறையில் பணியாற்ற நிச்சயம் மருத்துவம் படித்திருக்க வேண்டும். பொறியியல் பிரிவில் பணியாற்ற பொறியியல் படிப்பில் தேர்ச்சிப் பெற்றாக வேண்டும். ஆனால், இதழியல் துறையில் இதழியல் படிப்புமட்டுமல்லாமல், பொறியியல் துறை சார்ந்தவர்களும், மருத்துவப் படிப்பு படித்தவர்களும் பணியாற்ற முடியும்.
இதழியல் துறை என்பது எழுத்து மட்டுமேயன்று. ஓவியம், கலை, தொழில் நுட்பம், டிஜிட்டல்.. இன்னும் அடிக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில் படைப்பாற்றல் உங்களுக்கு எந்தந்தப் பிரிவில் இருக்கிறதோ, அந்தந்தப் பிரிவுகளில் இதழியலில் உங்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
• எழுதும் திறமையிருந்தால் நீங்கள் எழுத்தாளர்.
• ஓவியம் வரையும் திறமையிருந்தால் நீங்கள் கார்ட்டூனிஸ்ட்.
• டிசைனிங் தெரிந்திருந்தால் நீங்கள் பக்க வடிவமைப்பாளர்.
• டைப்பிங் பிரிவில் நீங்கள் கில்லாடியென்றால், டி.டி.பி. ஆபரேட்டர்.
• மொழியியலில் சிறப்பு திறமை பெற்றிருந்தால், பிழை திருத்துனர் பதவி.
• கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர், நெட்வொர்க்கிங் பிரிவில் வல்லுனர் என்றால் நெட்வொர் என் ஜினியர் பதவி.
• குரல் வளம் சிறப்பாக இருந்தால், தொகுப்பாளர்.
• அனிமேஷனில் கில்லாடியென்றால், புரோகிராம் டிசைனர்.
இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் நீங்கள் இதழியல் துறைகளில் சாதிக்க முடியும்.
இதழியல் துறையில் சாதிக்க படைப்பாற்றலும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு மட்டும் இருந்தால் போதும், தமிழகத்தை திரும்பிப் பார்க்கச் செய்யும் சிறந்த இதழியலாளராக திகழ்வீர்கள். கனவை இன்றே தீர்மானியுங்கள். நாளை உலகம் உங்களுடையதாய் இருக்கட்டும்.
TJ-