வணிகர்களின் ஏமாற்று வியாபாரத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நுகர்வோரிடம் பொருட்கள் கொள்வனவின் போது மேலதிக கட்டணங்களை வணிகர்கள் அறவிட முடியாது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட காரியாலய புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்.எம்.சாஜித் தெரிவித்தார்.
பாவனையாளர்களை அறிவூட்டும் மற்றும் பாவனையாளர்களை பலப்படுத்தும் முகமாக மக்களுடன் நேரடி பணியாற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று (06) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சமுர்த்தி தலைமைக் காரியாலய சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
பொதுமக்கள் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கடை உரிமையாளரிடமிருந்து பற்றிச்சீட்டினை பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் இக்கொள்வனவின் போது மோசடிகள் ஏதும் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் எங்களுக்கு அறிவிக்கும் போது இந்த பற்றிச்சீட்டினை வைத்தே வியாபாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே பற்றுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் விடயத்தில் மக்கள் கவனமெடுக்க வேண்டும்.
மக்கள் உற்பத்திப் பொருட்களை செய்யும் போது குறித்த பொருளின் உற்பத்தித் திகதி, காலவதியாகும் திகதி, தொகுதி இலக்கம், தரச்சான்றிதழ், பொருளின் உள்ளடக்கம் தொடர்பில் கவனம் செலுத்தல் வேண்டும். எரிவாயு கொள்வனவின் போதும் சிலின்டரை நிறுத்து வாங்குதல் வேண்டும். இதில் நுகர்வோர் கவனம் செலுத்தாததால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் அதிகார சபைக்கு கிடைத்துள்ளது.
பொருட்களை தெரிவு செய்யும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. வியாபாரிகள் கடையிலுள்ள பொருட்களை நுகர்வோர் கேட்கும் போது வழங்கல் வேண்டும். பொருட்களை இல்லை என்று மறுக்கவோ, பதுக்கி வைக்கவோ முடியாது. வியாபாரிகள் இலத்திரனியல் பொருட்களுக்கு குறைந்தது 6 மாத கால உத்தரவாதச் சான்றிதழ் வழங்கல் வேண்டும்.
வியாபாரிகள் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தல் வேண்டும். அரசாங்கத்தின் நிர்ணய விலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்தல் வேண்டும். பொருட்களுக்கு மேலதிகமாகவோ, மறைமுகமாகவோ கட்டணங்களை அறிவிட முடியாது.
வியாபாரிகள் பொருட்களின் அளவை நிறுவை தொடக்கம் பொருட்களின் நிறைகள் உள்ளிட்ட காலவதியான திகதி வரை மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இவை தொடர்பில் நுகர்வோர் அவதானமாக இருப்பதுடன் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட காரியாயத்திற்கு முறைப்பாடுகளை செய்ய முடியும். முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு உரிய நிவாரணம் நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்போது பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தினால் பாவனையாளர் பாதுகாப்புக்கான ஒரு வழிகாட்டி எனும் கையேடு வெளிக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது.