உலகில் உள்ள பல நாடுகளில் பலயீனமான சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற அச்சுறுத்தல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நாட்டைவிட்டு துரத்துதல் போன்ற போர்குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க யாருமற்ற நிலையில், தற்போது புதிய தன்னம்பிக்கை பிறந்துள்ளது.
குறிப்பாக புலிகளுக்கெதிரான இறுதி யுத்தத்தின்போது முள்ளியவாய்க்கால் பகுதியில் கணக்கின்றி கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும், தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்ற முஸ்லிம் மக்களுக்கும் இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தாலும் செல்வாக்குள்ள பணக்கார நாடுகள் ஏராளமான போர்க்குற்றங்களை செய்திருக்கின்றது. நீதி எல்லோருக்கும் சமம் என்றால் அவ்வாறான செல்வாக்குள்ள நாடுகளுக்கு எதிராகவும் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறு விசாரணை செய்வதென்றால் பாலஸ்தீன மக்களை துன்புறுத்தி கொலை செய்துவருகின்ற இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவும், மற்றும் அமேரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளையும் விசாரிக்க வேண்டும். இது சாத்தியமா ?
ஒல்லாந்து நாட்டின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றமானது மியன்மார் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மியன்மார் பௌத்த இராணுவத்தினர் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொலை செய்ததுடன் சுமார் ஏழரை இலட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டியுள்ளார்கள்.
புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களுடனும் நேரில் கண்ட சாட்சியங்கள் மூலமாகவும் முன்வைக்கப்பட்ட இந்த வழக்குக்கு பல இஸ்லாமிய நாடுகள் முன்னின்று செயல்பட்டன.
குறிப்பாக கம்பியா நாட்டின் ஜனாதிபதி அதாம் பரோ அவர்கள் இந்த வழக்கில் கடுமையாக வாதாடியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்தகாலங்களில் பல வருடங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவரும், நோபல் சமாதன பரிசு பெற்றவருமான ஆங் சான் சூக்கி அவர்கள் எந்த இராணுவம் தன்னை வீட்டுக்காவலில் வைத்ததோ அதே இராணுவத்தை காப்பாற்றுவதற்காக வாதாடி வருகின்றார்.
அதாவது இராணுவம் போர்குற்றம் செய்யவில்லை என்றும், இது உள்நாட்டு பிரச்சினை என்றும் தனது வாதத்தை முன்வைக்கின்றார். இது அவரது எதிர்கால பாதுகாப்பான அரசியலுக்கான ஏற்பாடாகும்.
தனது நாட்டின் கொலைகார இராணுவத்துக்கு சார்பாக வாதாடாவிட்டால், மியன்மாரில் தனது அரசியலை எதிர்காலங்களில் மேற்கொள்ள முடியாது என்பதற்காகவே மனட்சாட்சியை மூலையில் தூக்கி வீசிவிட்டு கொலைகாரர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றார்.
எந்தவொரு அரசியல்வாதியும் மனிதாபினானத்தைவிட தனது சுயநல அரசியலுக்கே முன்னுரிமை வழங்குவார்கள். அது ஆங் சான் சூக்கியையும் விட்டுவைக்கவில்லை.
எனவே இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது என்ன தீர்ப்பினை வழங்கப்போகின்றது என்று எதிர்வரும் நாட்களில் தெரிந்துவிடும். இந்த தீர்பானது உலகில் பலயீனமாக வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு ஓர் பாதுகாப்பு அரணை ஏற்படுத்துவதுடன், போர்குற்றத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.