கிழக்கு மாகாணத்தில் கடந்த பல வாரங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக ஏற்பட்டு உள்ள பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களின் தேவைகளை இம்மாகாணத்தின் ஆளுனர் அனுராதா ஜயம்பத்தின் வழிகாட்டல், அறிவுறுத்தல், ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய ஜனசஹன ஸ்ரீலங்கா மனித நேய ஸ்தாபனத்தின் தலைவர் டாக்டர் துஷித தேசப்பிரிய நேரில் கள விஜயம் மேற்கொண்டு அறிந்து வருகின்றார்.
ஆளுனர் அனுராதா ஜயம்பத் திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை சுப நேரத்தில் பதவியை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பெடுக்கின்றார். இருப்பினும் மாகாணத்தில் ஏற்பட்டு உள்ள அவசர நிலைமை தொடர்பாக உரிய அக்கறையை முன்கூட்டியே வெளிப்படுத்தி உள்ளார்.
இவரின் நல்லெண்ண தூதுவராக டாக்டர் தேசப்பிரிய அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்துக்கு உள்ளான பிரதேசங்களுக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை கடந்த 05 நாட்களாக பார்வையிடுகின்றார்.
அத்துடன் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் அடங்கலான அதிகாரிகள் மற்றும் அரசியல், சமூக, பொதுநல செயற்பாட்டாளர்கள் ஆகியோரை சந்தித்து நிலைமைகள், சவால்கள், தேவைகள் போன்றவற்றை செவிமடுக்கின்றார்.
இக்கள விஜயம் தொடர்பான விபரங்கள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியன அடங்கிய முழுமையான அறிக்கை ஆளுனருக்கு டாக்டர் தேசப்பிரியவால் விரைந்து சமர்ப்பிக்கப்படுகின்றது. இதை அடிப்படையாக கொண்டு உடனடியான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆளுனர் முன்னெடுப்பதாக உள்ளது.