சாய்ந்தமருது, இயற்கையை நேசிக்கும் மன்றம் (Nature Loving Forum, Sainthamaruthu - N.L.F) சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 வருட நிறைவு மற்றும் சுனாமியால் மரணித்தவர்களின் நினைவையொட்டி ஏற்பாடு செய்த கரையோரம் சுத்தப்படுத்தல் மற்றும் சிரமதான நிகழ்வு சாய்ந்தமருதில் இன்று நடைபெற்றது.
சாய்ந்தமருது, இயற்கையை நேசிக்கும் மன்றமானது சமூகம் சார்ந்த விடயங்களில் முன்னணி செயற்பாட்டாளர்களாக திகழும் கல்விமான்கள், புத்திஜீவிகள், துறைசார்ந்தவர்கள் மற்றும் இளைஞர்களைக் கொண்ட தன்னார்வ அமைப்பாக அண்மையில் தோற்றம் பெற்று தின்மக் கழிவகற்றல், சூழல் பாதுகாப்பு, சுகாதார விழிப்புணர்வு, சமூகம் சார்ந்த விடயங்களில் தனிமனித விழுமியங்களைப் பின்பற்றி ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை தயாரித்து செயற்படுத்தி வரும் ஒரு அமைப்பாகும்.
சாய்ந்தமருது 17ம் பிரிவு கடற்கரை உட்பட லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய சுற்றுச் சூழல் நீண்ட நாட்களாக குப்பைகள் கொட்டப்பட்டு மாசடைந்த நிலையில் காணப்படுவதை அவதானித்த அமைப்பினர் இதை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேற்படி நிகழ்வை நடாத்தியதுடன் மாத்திரம் நின்றுவிடாது குப்பைகள் நிறைந்து பாடசாலை மாணவர்களினதும், பொதுமக்களினதும் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்த குறித்த கடற்கரை பிரதேசத்தை பொதுமக்கள் தங்களது ஓய்வு நேரத்தை கழிக்கும் பசுமையான பொதுபோக்கு கடற்கரை பிரதேசமாக மாற்றும் பொருட்டு முன்னெடுப்பொன்றையும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி கரையோர சுத்தமாக்கல், சிரமதானம் போன்ற வேலைத் திட்டங்களை செய்தமைக்காக சாய்ந்தமருது, இயற்கையை நேசிக்கும் மன்றத்திற்கு பிரதேசவாசிகளும் பொதுமக்களும் பாடசாலை சமூகத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.