முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை பொதுத் தேர்தலில் செய்யக்கூடாது - பைஸர் முஸ்தபா தெரிவிப்பு


ஐ. ஏ. காதிர் கான்-
முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் மீண்டும் செய்யக் கூடாது. முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக இருந்து, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அதி கூடிய ஆதரவுகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில், ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று, (10) செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் எமக்கு சிறந்த படிப்பினையைக் காட்டியிருக்கின்றது. இத் தேர்தலில் முஸ்லிம் காங்கிஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்தன. ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாகப் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ் அமோக வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பிருந்தே, முஸ்லிம்கள் இந்த தேர்தலில் இரு பக்கமும் இருப்பதுதான் நல்லது என நான் கூறிவந்தேன்.
நடந்து முடிந்த அந்தத் தேர்தலில் ஜனாதிபதியாக யார் வருவார் என்பதைவிடவும், பெரும்பான்மைச் சமூகம் யாரை ஆதரிக்கின்றார்கள் என்பதைத்தான் முஸ்லிம் சமூகம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்.
இதுவரை காலமும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் தங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக்கூறப்படும் முன்னாள் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் எதிர்வரும் காலங்களில் தங்களது அரசியல் நடவடிக்கைகளை, வடக்கு கிழக்குக்கு வெளியே மேற்கொள்வது அவ்வளவு சிறந்ததல்ல.
இதன்காரணமாக, வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள 68 வீதமான முஸ்லிம்கள் தொடர்ந்தும் இக்கட்டான நிலைக்கே தள்ளப்படுவார்கள்.
எனவே, இந்த அரசியல் தலைவர்கள் தங்களது சுயலாப அபிலாஷைகளைக் கைவிட்டு பெரும்பான்மைச் சமூகம் தற்போது எந்தப் பக்கம் இருக்கின்றதோ, அந்தப் பக்கம் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே எனது நிலைப்பாடாகும்.
சிறந்த திட்டங்களையும், நோக்கங்களையும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் புதிய அரசுக்கு, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முஸ்லிம் சமூகம் அதி கூடிய ஆதரவுகளை வழங்க வேண்டும்.
எனவே, முஸ்லிம்கள் ஜனாதித் தேர்தலில் செய்த தவறை மீண்டும் பொதுத்தேர்தலிலும் செய்யக்கூடாது. அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்களாக, தேசப்பற்றுள்ளவர்களாக இருந்து பலம் சேர்க்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு என்று ஒரு பிரச்சினை ஏற்படுகின்றபோது, நானே எச் சந்தர்ப்பத்திலும் முன்னிலையில் நிற்கின்றேன்.
நான் சிங்கள, முஸ்லிம் மக்களுடன் இணைந்து அரசியல் செய்பவன். முஸ்லிம் மக்களுக்களின் பக்கம் மாத்திரம் இருந்து நான் சேவை செய்யக்கூடாது என்பதனால்தான், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குமாறு நான் முஸ்லிம்களை அறிவுறுத்தினேன். இருந்தும், முஸ்லிம் சமூகம் அதனைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது எனக்கு கவலையளிக்கின்றது.
நான் இரண்டு முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்துள்ளேன். இம்முறை எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. ஆனால், அதற்காக நான் வருத்தப்படவுமில்லை. இந்நிலையில், இராஜாங்க அமைச்சுப் பதவி வழக்குவதற்கான ஏற்பாடும் இருந்தது. எனினும், முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி இராஜாங்க அமைச்சுப்பொறுப்பை ஏற்கவில்லை. என்றாலும், இப்பதவியை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டேன். அவர் அதனை ஏற்றுக்கொண்டாரா, இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது. காதர் மஸ்தானுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி கொடுபடவில்லை. இதுவும் எனக்கு மன வேதனையை அளிக்கிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -