கல்முனை பொதுச் சந்தையில் இன்று வெள்ளிக்கிழமை தீ அனர்த்த ஒத்திகை நிகழ்வொன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை என்பன இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தன.
இதன்போது சந்தையில் மாதிரி வர்த்தக நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவததற்காகவும் சம்பவத்தினால் தீக்காயங்களுக்குள்ளாகியோரை அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காகவும் மேற்கொள்கின்ற துரித செயற்பாடுகளை மையப்படுத்தி இந்த அனர்த்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன் இச்சம்பவத்தின்போது பொலிஸார் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளையும் இவ்வொத்திகையில் அவதானிக்க முடிந்தது. அத்துடன் இத்தகைய அனர்த்த வேளையில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.
சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இத்தீயணைப்பு ஒத்திகையினால் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன் கல்முனை நகரில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது. இதனை போக்குவரத்து பொலிஸார் சீர்செய்து கொண்டிருந்தனர். இராணுவம் மற்றும் கடற்படையினரும் இந்நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் எம்.ஏ.சி.றியாஸ் இவ்வனர்த்த ஒத்திகை நிகழ்வை நெறிப்படுத்தினார். இதில் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.நஸீர், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.