மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபையானது எதிர் வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பினையும் நுகர்வோர் விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
அந்தவகையில் எதிர் வரும் பண்டிகைக்காலங்களில் நுகர்வோரை ஏமாற்றுகின்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்கின்ற வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயாகுமார் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபையின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரியான ஆர்.எப். அன்வர் சதாத் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொருட்களைப் பதுக்கி வைக்கின்ற, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற, நேர்மையற்ற வியாபார நடவடிக்கையில் ஈடுபடுகின்ற, நுகர்வோரை ஏமாற்றுகின்ற, வியாபார நிலையங்களுக்கு எதிராக நீதி மன்றத்தின் ஊடாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபையின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரியான ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் அவர் தெரிவிக்கையில்,
இம்மாதம் 19 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அரிசி வெள்ளை, சிவப்பு சம்பா (வேக வைத்தது அவித்துப் பெறப்பட்டது ) (கீரி சம்பா மற்றும் சீரக சம்பா தவிர்ந்த ) ஆகக் கூடிய சில்லறை விலை ஒரு கி.கிராம் 98/= அத்துடன் வெள்ளை, சிவப்பு நாடு (வேக வைத்தது, அவித்துப் பெறப்பட்டது) (மொட்டைக்கறுப்பன் மற்றும் ஆட்டக்காரி ) தவிர்ந்த அரிசி ஆகக் கூடிய விலை ஒரு கி.கிராம் 98/= ஐ விட அதிகாமாக விலைக்கு விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு இவ்வாண்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தினை மீறிய 800 வியாபார நிலையங்களுக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் போது நீதிமன்றத்தினால் 3,581,500/= தண்டப்பணமாக விதிக்கப்பட்டது. இதில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, காட்சிப்படுத்தியமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை, நிர்ணயிக்கப்பட்ட விலையினை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனைசெய்தமை எஸ்.எல்.எஸ். தரச் சான்றுதல் இல்லாத இலத்திரணியல் உபகரணங்கள், தலைக்கவசங்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இலங்கையில் பதிவு செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்ட சரும பூச்சுகிறீம், சொக்கலேட்டுகள் போன்ற நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தினை மீறிய வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டன.
குறித்த சட்டதிட்டங்களை மீறி விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு இவ்வாறு விலையை விட அதிகரித்து விற்பனை செய்யும் வியாபாரிகளைப் பற்றிய தகவல்களை 1977 தொலை பேசி மூலம் அறிவிப்பதுடன் மற்றும் என்னுடைய தொலைபேசி இலக்கமான 0770110096 க்கு தகவல்களை அறியத்தரும்படி கிழக்கு மாகாண பொறுப்பதிகாரியான ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.