எச்.எம்.எம்.பர்ஸான்-
பெருகிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை பகுதியில் பாரிய டெங்கொழிப்பு வேலைத்திட்டமொன்று திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் பூரண ஒத்துழைப்போடு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மீராவோடை இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்த இந்நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வேலைத்திட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் இணைந்து செயற்பட்டனர்.
குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள், பொது இடங்கள், வீதிகள் போன்றவற்றில் காணப்பட்ட டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் பொருட்கள் அகற்றப்பட்டதோடு, டெங்கு நோயின் தாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாகவும், வீடுவீடாகச் சென்றும் டெங்கொழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டோர் எமது மழலை செல்வங்களையும், எமது பெறுமதிமிக்க உயிர்களையும் பாதுக்கக்க வேண்டி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.