பல்லினங்கள் வாழும் நாடொன்றில் பெரும்பான்மை சமூகத்தின் எழுச்சிகள் சிறுபான்மை அரசியலைப் பாதிக்குமா?இந்திய,இலங்கையின் இன்றைய அரசியலை ஒரு கண்ணோட்டமாகவும் மலேஷிய, ஆபிரிக்க நாடுகளின் பின்புலங்களை ஒரு பார்வையாகவும் வைத்து இதை ஆராயலாம்.அரசியல் அதிகாரத்தை ஆயுதங்களூடாகப் பெறும் சிறுபான்மை சமூகங்களின் போராட்டத்தின் தோல்வியில்,ஜனநாயக அரசியல் தழைக்கிறதா? ஜனநாயக அரசியலின் தோல்வியில் ஆயுதப்போராட்டம் தலையெடுக்கிறதா? முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் முட்டையிட்டதா? பல சிக்கல்கள் நிறைந்த சித்தாந்தங்கள்தான் இவை.
இலங்கை சிறுபான்மைச் சமூகத்தின் அரசியலில் தமிழ் நாட்டிலுள்ள எட்டுக் கோடி திராவிடர்களின் தொப்புள்கொடி உறவே இந்தியாவைத் தவிர்க்க முடியாத தலையீடாக்கியது. இந்த வரலாற்றுக்குள் வடக்கு,கிழக்கில் தழைத்த ஜனநாயக அரசியலும் பின்னர் போராட்டமாக வெடித்த ஆயுத அரசியலும் உச்சக் கட்டத்தை எட்டியபோது அதிர்ஷ்டவசமாக தமிழ் நாடு அரசியலும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தது.
இந்தச் சக்தி இந்திய மத்திய அரசை இலங்கையில் தலையிடத் தூண்டியதால் தமிழர் போராட்டம் சர்வதேச மயமானதே உண்மை.இந்நிலையில் மாநில அரசுகளால் மத்திய அரசு தடுமாறி,காஷ்மீர் விடயத்திலான பாகிஸ்தானின் தலையீடு இந்தியாவுக்கு தலையிடி கொடுத்தமை, மிக நீண்டகாலமாக எதிர்க் கட்சியிலிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு இந்துத்துவத்தை விழிப்பூட்டும் வாய்ப்பை ஏற்படுத்திற்று.இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ."மாநில அரசுகளின் அழுத்தங்களுக்கு இந்திய அரசு அடிபணிவது அயல் நாடுகளின் ராஜதந்திரங்களை கேள்விக்குள்ளாக்கும்" என எச்சரித்தார்.இந்த எச்சரிப்பை எள்ளி நகையாடியதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
யுத்த வெற்றிக்குப் பின்னரான ஐந்தாண்டுகளில் மஹிந்த இதை அடிக்கடி எச்சரித்தமைக்கு தமிழ் நாடு அரசின் தீர்மானங்களே காரணமாகின.நந்திக் கடலில் நடந்தது இனப்படுகொலையாகவும், இலங்கையின் போர் விவகாரத்தை ஜெனீவாவில் விசாரிக்குமாறும் தமிழ் நாடு அரசு தீர்மானித்தமை தென்னிலங்கையை பாதித்த சம நிகருக்கு பாரதீய ஜனதாக் கட்சியையும் விழிப்பூட்டியது.
இங்குள்ள 39 எம்பிக்களை வைத்து எம்ஜி ஆரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகமும் மாறி,மாறி மத்தியில் புதுடில்லி அரசியலை அந்தக்காலத்தில் ஆட்டிப்படைத்தன.
சிறுபான்மை இனத்தின் அழுத்தம் இலங்கை அரசையும் அவ்வினத்தின் தொப்புள்கொடி பரம்பலான தமிழ் நாடு
அரசின் அழுத்தம் இந்திய மத்திய அரசையும் எச்சரித்த தால்,ராஜபக்ஷக்களுடன் சேர்ந்து நரேந்திர மோடியும் விழித்துக் கொண்டார்.இந்த விழிப்பில் உண்டான எழுச்சியே இலங்கையில் பௌத்தத்தையும் இந்தியாவில் இந்துத்துவத்தையும் அதிகாரத்தில் அமர்த்திற்று.
இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு தொப்புள்கொடி போல தென்னிலங்கைக்கு வடஇந்தியாவும் ஒருவழி உறவாகவே பார்க்கப்படுகின்றது.இதனால் இந்த எழுச்சிகளுக்குள் தமிழ் நாடு அரசியலும் இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளும் எப்படி மீண்டெழப் போராடுவது?.
கடைசியாக நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடியின் பாரதீய ஜனதாக் கட்சி 545 ஆசனங்களில் 355 ஐக் கைப்பற்றிய தால்,தமிழ் நாட்டிலுள்ள 39 எம்பிக்களையும் வென்றெடுத்த,தி.மு.கவை பேரம்பேச முடியாத பேசா மடந்தையாக் கியுள்ளது.
இதே போன்று சிறுபான்மைக் கட்சிகளின் வீறாப்புக்களை தகர்த்து ராஜபக்ஷக்களின் கிரீடம் உயர்ந்ததால் வடக்கு,கிழக்கு உரிமை அரசியலும் அநாதரவாகியுள்ளது.இந்தப் பின்னணிகளுக்குள் நுழைந்து ஆராய்வதுதான் இக்கட்டுரை.
புலிகளின் போராட்ட வீழ்ச்சியும் ,ராஜபக்ஷக்களின் மீள் எழுச்சியும் உரிமை அரசியலை அடைவதில் பெரும் தடைகளை ஏற்படுத்தியதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். மேலும் இதற்குப்பின்னர் விரிசலடைந்த தமிழ்,முஸ்லிம் அரசியல் ஒன்றுடனொன்று முரண்பட்டமை இத்தடைக்கு மேலும் வலுச்சேர்த்ததே பெரும் வேதனை. பிரித்தாளும் பேரினவாதிகளின் கரங்களுக்குள் அகப்பட்ட எமது உரிமைச் சிந்தனைகள் முரண்பாட்டு அரசியலாக வளர்க்கப்படுவதை நாம் கண்டு கொண்டாலும் அதிலிருந்து விடுபட முயற்சிக்கவில்லை.அமைச்சுப் பதவிகளுக் காக முஸ்லிம் தலைமைகள் ஆசையூட்டப்பட்டதும் தீர்வைத் தருவதாக தமிழர்கள் இந்தியாவால் ஏமாற்றப் படுவதும் ஆரிய பெரும்பான்மையின விழிப்புணர்வில் பிறந்த வியூகங்களாகவே பார்க்கப்படவேண்டும்.
மாநில அரசுகளின் ஆதரவில் தங்கியிராத இந்திய மத்திய அரசும், சிறுபான்மையினரின் ஆதரவில் இயங்காத இலங்கை அரசும் எதிர்காலத்தில் விரிக்கவுள்ள அரசியல் பொறிகளுக்குள் நாம் மாட்டிவிடக்கூடாது. மாட்டாமல் இருக்க என்ன வழி?
உரிமை அரசியலையும் அழுத்த அரசியலையும் இல்லாமலாக்கி, பெரும்பான்மை சமூகத்தில் நிலைப்பது பற்றித்தான் கோட்டாபயவுடன் நரேந்திர மோடி பேசியிருப்பார்."எதைக் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை,சீனாவுடன் மட்டும் சேர்ந்து விடாதே."பாரதம் சூசகமாக சொல்ல விழைவது இதுதான்.
நேட்டோவின் இலக்குகளுக்குள் நுழைந்து இரகசியங்களை அறியுமளவுக்கு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ள சீனா இன்று ஏனைய வல்லரசுகள் அனைத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாகியுள்ளது. அண்மையில் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்த நேட்டோவின் எழுபதாவது மாநாட்டிலும் இதுபற்றியே பேசப்பட்டது."சைபர் கிரைம்" இணையக் குற்றங்களின் கில்லாடியான சீனாவுடன் இலங்கை சேர்வதை இந்தியா விரும்பவில்லை.இதற்காக தேவையற்ற அழுத்தங்களை இலங்கைக்கு கொடுப்பதும் இந்தியாவுக்கு விருப்பமில்லை.இவ்விரு நாடுகளும் மரபின் அடிப்படையில் தோழமையாவதும் தேவைக்காக தோள் கொடுப்பதும் தவிர்க்க முடியாத வரலாறாகிறது .இந்த வரலாற்றுக்குள் நுழைவதுதான் சிறுபான்மை அரசியலைப் பாதுகாக்கும். இந்தப் பாதுகாப்பு நிச்சயமாகப் பேரம் பேசலுக்கானதாக இருக்காதென்பதே இன்றைய யதார்த்தமாகும்.
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களையும் அயலிலுள்ள முஸ்லிம் நாடுகளிலிருந்து அடைக்கலம் புகுந்தோரையும் மத ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானோர் எனக் கருதாத இந்திய மன நிலைகளைப் புரிந்தே சிறுபான்மைச் சமூகங்கள் விழிக்க வேண்டியுள்ளன.