நாட்டைக் கட்டியெழுப்புவதோடு உண்மையாக அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால், இனங்களிடையேயும் சமூகங்களிடையேயும் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும். அப்போதுதான் தேசியப் பாதுகாப்பும் பொருளாதார அபிவிருத்தியும் உத்தரவாதப்படுத்தப்படும். புதிய அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலில் அதற்கே முதன்மையான இடத்தை வழங்க வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை கோட்டே சோலிஸ் ஹோட்டலில் இடம்பெற்ற, தேசிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, சட்டத்தரணி லால் விஜேநாயக்க, ஜயதிலக்க கம்மல்லவீர, தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் கருணாதிலக்க, NFGGயின் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய சிராஜ் மஷ்ஹூர் மேலும் தெரிவித்ததாவது:
தனிச் சிங்கள பௌத்த நாட்டை உருவாக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லா சமூகங்களும் உள்ளடங்கிய இலங்கை நாட்டையே கட்டியெழுப்ப வேண்டும்.
புதிய அரசாங்கம் அமைத்துள்ள முதலாவது அமைச்சரவையில் எல்லா சமூகத்தினரும் உள்வாங்கப்படவில்லை என்ற ஆதங்கம் உள்ளது.
இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கேட்கிறார்கள். இந்த நாட்டில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தபோதெல்லாம், அது மக்களது நலனுக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1970, 1977 ஆட்சிகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
ஜனவரி 03 ஆம் திகதிக்குப் பிறகு மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பததற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. நாட்டு மக்களது விவகாரங்களைப் பேசித் தீர்மானிக்கின்ற உயர் சபையே பாராளுமன்றமாகும். பாராளுமன்றத்தை மீண்டும் மீண்டும் ஒத்திப் போடுவதன் மூலம் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. புதிய ஆட்சிக்குப் பின்னர் பேசப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அவற்றை எங்கு போய்ப் பேசுவது?
நாட்டை இராணுவமயமாக்குவது ஆபத்தானது. சிவில் நிர்வாகத்தைக் கையாள்வதற்கு பொலிஸாரும் தகுதி வாய்ந்த அதிகாரிகளும், போதிய ஆற்றலுள்ள சிவில் சமூகமும் உள்ள நிலையில் இது அவசியமற்ற விடயமாகும்.
தென்னாசியாவில் இலங்கைக்கென்று நீண்ட ஜனநாயகப் பாரம்பரியம் உள்ளது. அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சுதந்திரமும் சமத்துவமும் நிலவும் நாட்டையே நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
சகல மக்களையும் சமமாக நடத்துவோம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். ஆனால், நடைமுறைச் செயற்பாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை.
ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், புதிய அரசாங்கம் திசை மாறிச் சென்றுகொண்டிருக்கிறது.
தேர்தலுக்கு முன்னர் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரானவர்கள் போல் காட்டிக் கொண்டார்கள். அப்போது MCC ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து விட்டு, இப்போது அதில் கைச்சாத்திட முற்படுகின்றனர். நிலமைகள் தலைகீழாக மாறுகின்றன.
மேலும், நீதித் துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்பலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் கட்டியெழுப்புவது தொடர்பான ஆலோசனைகள், தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடைகளில் அதிகம் பேசப்பட்டதை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துகிறோம்.
புதிய அரசாங்கத்திற்கு அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. ஒருபுறம் மாற்றங்கள் நடப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு நிலவுகிறது. ஆனால், மக்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
உதாரணமாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரிசி, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு மக்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இதில் நல்ல மாற்றம் வேண்டும்.
மணல் அகழ்ந்து, அதைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் தேவையில்லை என்ற அறிவிப்பு மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவில்லை. அரசியல்வாதிகளின் அடிவருடிகளே இதன் மூலம் கொள்ளை இலாபமீட்டுகின்றனர். மண்கொள்ளையடிக்கின்றனர். இதனால் நாட்டின் சுற்றுச் சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தேர்தல் காலத்தில் இவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கு வழங்கப்படும் அரசியல் இலஞ்சமாகவே இது அமைந்துள்ளது.
இவற்றையெல்லாம் சீர்செய்து, மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில் புதிய அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.