சமூகசேவகரும், சம்மாந்துறை நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபகருமான பொறியியலாளர் UK.நாபீ எதிரே வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நித்தித்துவப்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் களமிறங்குவதற்கான முஸ்தீபுகள் இடம் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக முதற்கட்ட நடவடிக்கையாக கட்சியின் தலைமையும் முன்னால் அமைச்சருமான றிசாட் பதுடீனுடனான சந்திப்பும் இடம் பெற்றுள்ளதாகவும், நாட்டில் உள்ள அரசியல் சூழ் நிலைகளை கருத்தில் கொண்டு பாராளுமன்ற தேர்தலில் கட்சியானது எவ்வாறான முன்னேற்பாடுகளை அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளும் என்பதனை பொறுத்தே இறுதி கட்ட பேச்சுவார்த்தைகளின் பொழுது தெளிவான முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதனை குறித்த தகவல் தெளிவுபடுத்துவதாக உள்ளது.
அதே நேரத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக யூ.கே நாபீரிடம் வினவிய பொழுது சம்மாந்துறையில் நிலையான அரசியல் இஸ்தீரதன்மையினை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக இருப்பது ஒரு புறம் இருக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேவைப்பாட்டின் முக்கியத்துவத்தினை அம்பாறை மக்களுக்கு தெளிவுபடுத்துவது தூர நோக்கு சிந்தனையுள்ள சமூக சிந்தனையாளர்களின் தார்மீக பொறுப்பாகவே தான் கருதுவதாக தெரிவித்தார்.
அத்தோடு கிழக்கு மாகாணத்தில் குறித்த கட்சியினை வேரூண்ட செய்வதற்கு பெரும் பங்காற்றி வரும் கல்குடாவின் அரசியல் தலைமையான அமீர் அலியின் கைகளை மேலும் பலப்படுத்தி அம்பாறை மாவட்ட மக்களினுடைய அரசியல் அபிலாசைகளையும் அதனோடு சேர்ந்த உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேவைப்பாட்டினை உணர்ந்து அமீர் அலியினுடைய எதிர்கால அரசியலுக்கு பக்கபலமாக செயற்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.