பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை, ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவப் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மஹாபொல புலமைப் பரிசிலுக்கான நிதியை அதிகரித்துக் கொள்ளும் சில உபாய மார்க்கங்களையும் அரசாங்கம் வகுத்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில், மஹாபொல மற்றும் புலமைப்பரிசில் நிலுவைப் பணம், எதிர்வரும் வாரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் தொகையாக, தற்போது 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. அதனை 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பில், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக, அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப்பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்கின்றது.
மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல நிதியத்தில் 10.5 மில்லியன் ரூபா நிதி இருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் 2 பில்லியன் ரூபா நட்டம் இழக்கப்பட்டது. நட்ட நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும்.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். மஹாபொல நிதியத்தை 20 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிய லொத்தர் சீட்டொன்றை ஆரம்பித்தல், மஹாபொல புலமைப்பரிசிலில் நன்மை பெற்று உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் பொருளாதார மட்டத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களிடம் நிதியைச் சேகரித்தல், நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் நிதி சேகரித்தல் உப்பட பல்வேறு மூலோபாயங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.