தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்த இப்புத்தகக் கண்காட்சியில், மணிமேகலை பிரசுரத்தின் 43 நூல்களின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவிற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் வைத்தியநாதன், கிருபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
விழாவில் வெளியிடப்பட்ட 43 நூல்களின் முதல் பிரதிகள் அடங்கிய பொதியை நீதியரசர் எஸ்.வைத்தியநாதன்-நடிகையும் நடனக் கலைஞருமான சொர்ணமால்யா இருவரும் இணைந்து வழங்க, தமிழ்த் தொண்டாளர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொண்டார்.
மணிமேகலை பிரசுரத்தின் ஆசிரியர் குழுத் தலைவர்; லேனா தமிழ்வாணன் தனது வரவேற்புரையின்போது இன்றுடன் புரவலர் வாங்கிய நூல்களின் முதற்பிரதிகளின் எண்ணிக்கை 1050 ஆக உயர்கிறது என குறிப்பிட்டபோது சபையில் பலத்த கரவொலி எழுந்தது.
திரைப்பட் இயக்குநர் வசந்த் எஸ்.சாய், குமுதம் குழுமம் அதிபர் ஜவாஹர் பழனியப்பன், நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, கவிஞர் விவேகா, இளம்பாரி கருணாகரன், சுமதி ஸ்ரீநிவாசன், கலைஞர் கலைச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இலங்கைப் புரவலருக்கும், கலைஞருக்கும் உயர்நீதிமன்ற நீதியரசர் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்ததுடன் நினைவுப் பரிசில்களையும் வழங்கினர். வாழ்த்துரை வழங்கிய வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு திருமதி மர்யம் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தினார். ஜெயஸ்ரீ சுந்தர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பங்கேற்ற- மேலாளர் ஆர்.மோகன்ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.