பல இலட்சம் பெறுமதியான 5 கஜமுத்துக்களை தம்வசம் வைத்திருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் 7 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாடி வீட்டு வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை(31) இரவு 10 மணியளவில் இவர்கள் கைதாகினர்.
கல்முனையில் நிலைகொண்டுள்ள கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகல்களை அடுத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.
இவ்வாறு கைதான நபர்களிடம் இருந்து அவர்கள் பயணம் செய்ததாக நம்பப்படும் டொல்பின் ரக வேன்,7 கைத்தொலைபேசிகள்,5 கஜமுத்துக்கள் என்பன மீட்கப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச்சந்தேக நபர்கள் சுமார் 25 முதல் 43 வயது உடையவர்கள் எனவும் திருகோணமலை மாவட்டம் கந்தளாய், கிண்ணியா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
கைதான 7 சந்தேக நபர்களும் சான்று பொருட்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.