83 வருட பழைமை வாய்ந்த இலங்கையின் முதலாவது இ.கி.மி.சிறுமியர் இல்லத்திற்கு மூடுவிழாவா?



காரைதீவு  சகா-

டந்த 83வருடகாலம் சிறப்பாக இயங்கிவந்த இலங்கையின் முதலாவது சிறுமியர் இல்லமான காரைதீவு இ.கி.மிசன் சாரதா சிறுமியர் இல்லத்தை மூடஎடுக்கும் முயற்சிக்கு காரைதீவு மக்கள் பெரும் கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

உலகின்முதல்தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரால் 1937இல் உருவாக்கப்பட்டஇச்சிறுமியர் இல்லம் கடந்த 82வருடகாலம் தாய்தந்தையற்ற அநாதரவான குழந்தைகளுடன் மிகவும் சீரும்சிறப்புடன் ஆன்மீகரீதியில் இயங்கிவந்தது.

இவ்வில்லத்திற்கான காணியினை காரைதீவைச்சேர்ந்த இராசகோபாலபிள்ளை இராமநாதபிள்ளை (கொஸ்தாபல்)என்பவரால் வழங்கப்பட்டது. 1936.03.14ஆம்திகதி இல்லத்திற்கான அடிக்கல் சுவாமி விபுலாநந்தரால் நடப்பட்டது.இவ்வில்லம் நிருமாணிக்கப்பட்ட பின்பு 1937.01.31இல் அப்போதைய அரசாங்கசபைத்தலைவர் சேர்.வைத்திலிங்கம் துரைசாமி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
கல்லடியிலுள்ள மிசன் சுவாமிகளின் மேற்பார்வையில் ஆரம்பத்தில் அருகிலுள்ள பாடசாலை அதிபர்களும் பின்னர் காரைதீவைச்சேர்ந்த அதிபர்களான சீ.தங்கராசா சீ.பொன்னையா வே.தம்பிராசா ஆகியோர் இல்லமேற்பார்வையாளர்களாக சேவையாற்றினர். இறுதியில் பலஆண்டுகளாக பொ.சிவயோகனின் சீரிய மேற்பார்வையில் அவ்வில்லம் விஸ்தரிக்கப்பட்டு புதிய கட்டடமும் திறந்துவைக்கப்பட்டது.

அப்படிப்பட்ட இவ்வில்லத்தை திடிரென மூட இ.கி.மிசன் கல்லடி நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென காரைதீவூர்மிசன்அபிமானிகளுடன் சுவாமிகளின் கூட்டமொன்று மணிமண்டபத்தில் நடாத்தப்பட்டபோது அவர்கள் மூடுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மாறாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருந்தும் காரைதீவு சமுகத்தின் கருத்துக்களையும் பொருட்படுத்தாது தற்போது மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதை அறிந்து காரைதீவு மக்கள் கவலையடைந்துள்ளனர்.

அதன் ஒர் அங்கமாக இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் பயின்ற அனைத்து இல்லமாணவிகளையும் விலக்கியெடுத்து கல்லடிக்குக் கொண்டுசென்றுள்ளனர். கூடவே மிசன்அபிமானிகளுக்கும் தெரியாமல் அங்குள்ள தளபாடங்களையும் ஏற்றிச்சென்றுள்ளதாக தெரிகிறது.

இவ்வில்லத்தை மூடி தொழினுட்பவகுப்புகளையும் தியான யோகா வகுப்புகளையும் நடாத்த மிசன்நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவை இங்கு அவசியமில்லை என பொதுநல அமைப்புகள் கூறுகின்றன. . மாறாக இவ் இல்லத்தை தொடர்ந்து காரைதீவில் இயங்கச்செய்து இ.கி.மிசனுக்கும் காரைதீவுக்குமிடையிலான தொப்பூழ்க்கொடி உறவினைத் தொடர்ந்து பேணுமாறு காரைதீவின் பல பொதுநல அமைப்புகள் இ.கி.மிசன் தலைமைகளுக்கு கடிதங்களை அனுப்பிவருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -