குளிரூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு அரசியல் செய்யமாட்டோம் - பைஸர் முஸ்தபா


ஐ. ஏ. காதிர் கான்-

னாதிபதித் தேர்தலின்போது மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து அமோக வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். இதேபோன்று, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை, மக்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மருதானையிலுள்ள மத்திய கொழும்பு காரியாலயத்தில் புது வருட முதல் நாள் ஒன்றுகூடல் நிகழ்வு, நேற்று முன் தினம் (01) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மலர்ந்துள்ள 2020 ஆம் ஆண்டினை வரவேற்குமுகமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில், அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், சமயப் பெரியார்கள் உள்ளிட்ட பெருந்திரளான கொழும்பு வாழ் மக்கள் கலந்து சிறப்பித்தனர். 

பைஸர் முஸ்தபா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எடுத்த அரசியல் ரீதியிலான தீர்மானத்தை, பொதுத் தேர்தலிலும் எடுக்க வேண்டும்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. அந்தப்பணிகளில் அரச சேவையாளர்களும் கூட்டுப்பொறுப்புடன் மக்களுடன் நெருக்கமாக இணைந்து சேவைகளை வழங்க தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் பொருளாதார அபிவிருத்தியையும் எமது இலக்கை நோக்கிய பயணத்தையும் தொடர முடியும். அத்துடன், பிரமுகர்கள், மதத்தலைவர்களின் ஆலோசனைகள், கருத்துக்களையும் மதித்து பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

கொழும்பு மாவட்டம், பல்லின சமூகங்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாகத் திகழ்கிறது. எனவே, இம்மாவட்டம் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கொழும்பு மாவட்ட மக்கள் நல்லவர்கள். இவர்கள் இனவாதத்துக்கும் துவேஷத்துக்கும் ஒருபோதும் சோரம் போகாதவர்கள்.ஆனால், சில அரசியல்வாதக் கட்சிகள், இவர்களுக்கு ஏதாவது ஆசையைக்காட்டி, இவர்களை வழி கெடுக்க முனைகிறார்கள். இதற்காக எமது தன் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்துவிடக் கூடாது. நாம் எப்போதும் எம்மைப் பாதுகாத்துக் கொண்டு அடுத்தவர்களையும் மதித்து நடக்க வேண்டும்.

பிறந்திருக்கும் புத்தாண்டிலிருந்து நாட்டுக்காகவும், பொது மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு அரசியல்வாதிகள் என்ற ரீதியில் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் தலைமையின்கீழ், தற்போது நாம் சிறந்த நிர்வாகம் ஒன்றைப் பெற்றுள்ளோம். 

இந்த நிர்வாகத்தின் கீழ், மக்களாகிய நீங்கள் தொடர்ந்தும் நிறையவே சேவைகளையும் தேவைகளையும் பெறவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். அதற்கு, எதிர்வரும் பொதுத்தேர்தலில் உங்களுடைய பாரிய பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நாம் குளிரூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு ஒருபோதும் அரசியல் செய்யமாட்டோம். மக்களுடன் மக்களாக இருந்துகொண்டு அரசியல் செய்வதே எமது பணியாகும். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்குப் பின்பு, கொழும்பு வாழ் மக்களின் மேலும் பல தேவைகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றையும் நிச்சயம் நாம் கவனத்தில் எடுத்து, தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -