காரைதீவு சகாதேவராஜா-
தாய் தந்தையர் இருவரும் பார்வையிழந்த விழிப்புலனற்றோர். அவர்கள் பெற்றெடுத்து வளர்த்த இரட்டையர்கள் இருவரும் அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் கணிதத்துறையில் உயர்பெறுபேறுகளைப்பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி மகத்தான சாதனை படைத்துள்ளனர்.சகலசெயற்பாடுகிளல் ஒத்தஇயல்பைக் காண்பித்துவரும் இந்த ஒத்தஇரட்டையர்கள் இருவரும் பரீட்சைப்பெறுபேற்றிலும் 2ஏபி என்ற ஒரே சமதரசித்தியைப்பெற்றுள்ளமை மேலும் வியப்பிற்குள்ளாகியுள்ளது.
இந்த வியப்பூட்டும் சாதனையைப்படைத்தவர்கள் இதயராசா தனுஜன் இதயராசா அனோஜன் என்ற இரட்டைச்சகோதரர்களாவர். மட். கல்லடியைச்சேர்ந்தவர்கள் இவர்கள்.
கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர்கள். முதல்தடவையாக க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றி தனுஜன் மற்றும் அனோஜன் ஆகியோர் 2ஏ1பி சித்தியைப் பெற்றனர்.
மாவட்ட நிலையில் முறையே 6ஆம் 18ஆம்நிலையிலுள்ளனர். இருவரும் பொறியியல்துறைக்குத் தெரிவாகியுள்ளனர்.
தந்தையரான இதயராசா விழிப்புலனற்றவர். அவர் கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஆசிரியராவார். தாயார் விழிப்புலனற்ற இல்லத்தரசி.
இருவருக்கும் பிறந்த இரட்டைக்குழந்தைகள்தான் தனுஜன் அனோஜன் . இவர்களிருவருக்கும் விழிப்புலனுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனையாளர் பாராட்டுவிழா!
உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் தமது சங்க உறுப்பினர்களது பிள்ளைகளின் கல்விச்சாதனைகளைப் பாராட்டிக்கௌரவிக்கும் விழாவை அதன்தலைவர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நேற்றுமுன்தினம் கல்லடியில் நடாத்தியது.
இவ்விழாவில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பிரபல சமுகசேவையாளரான காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கிழக்கு மாகாண பொலீஸ்சேவை ஆணைக்குழவின் தலைவர் பி.ரவீந்திரன் ஆகியோர் அதிதிகளாகக்கலந்துகொண்டு பாராட்டினார்கள்.
விழாவில் இரட்டைச்சகோதரர்களான தனுஜன் ஆனோஜன் ஆகியோருடன் திருமலை இந்துக்கல்லூரியில் தரம்5புலமைப்பரிசில் பரீட்சையில் 174புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த ஹிசாந்தன் சர்மின் என்ற மாணவனும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
சர்மினின் தந்தையார் ஹிசாந்தன் விழிப்புலனற்ற ஆசிரியராவார். அவர் கணணிப்பயிற்சி ஆசிரியராக பணியாற்றிவருபவராவார்.
அதிதி தவிசாளர் கி.ஜெயசிறில் அங்கு பாராட்டுகையில்:
தமது பிள்ளைகளின் முகங்களைக்காணாத பெற்றோர் இவ்வுயர் சாதனையைக்கண்டு உளம்பூரிக்கின்றனர். நாமும் உள்ளத்தால் நெகிழ்ந்து பாராட்டுகின்றோம். ஊமை கண்ட கனவு போல் அவர்களது நிலை இருந்தாலும் இறைவன் அவர்களது வாழ்வில் ஒளியேற்றியுள்ளாhன் என்றே கூறவேண்டும்.
ஏனைவர்களிடம் கையேந்தக்கூடாதென்பதற்காக 35பட்டதாரிகளை உருவாக்கிய இதயராசா ஆசிரியரின் சொந்த பிள்ளைகள் இருவரும் இவ்விதம் மகத்தான சாதனையைப்படைத்திருப்பதென்பது ஒரு முன்மாதிரியாகும். ஏழைகளுக்கு கரம் கொடுக்கவேண்டும் என்ற சிந்தனையில் ஊறிய அவர்கள் பொறியியலாளர்களாக வந்து சமுகத்திற்கு மகத்தான சேவையாற்றவேண்டும். என்றார்.
காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா