இந்நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை சிங்கள மக்கள் சிறுபான்மையின மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதன் மூலமே நாட்டின் நிரந்தர சமாதானத்திற்கும், நிலையான அபிவிருத்திக்கும் வழிவகுக்குமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது கண்டனத்தை தெரிவித்தார்.
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவினால் கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது தனிநபர் சட்டதிருத்த யோசனைக்கு தனது கண்டனத்தை தெரிவித்து இன்று வெளியிட்ட தனது ஊடக அறிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு சுதந்திரமடைந்த காலம்தொட்டே பெரும்பான்மை சமூகம் தமது அதிகாரத்தையும் பலத்தையும் சிறுபான்மையின மக்களின் அபிலாசைகளுக்கு எதிராகவே பிரயோகித்து வருகின்றது. இப்படியான தொடர்ச்சியான அடக்குமுறைகள், ஜனநாயக விதிமீறல் உச்சத்தை தொட்ட நிலையில்தான் இந்த நாடு நீண்ட யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதன் மூலம் நாட்டின் கௌரவம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவித்து விலைமதிக்க முடியாத பல இலட்சக்கணக்கான உயிர்களையும் இழக்க வேண்டியேற்பட்டன.
இன்று யுத்தம் நிறைவுற்றுள்ளது. ஆனால் இந்த யுத்தம் ஏன் ஆரம்பிக்கப்பட்டன என்பது தொடர்பாக இன்னும் பெரும்பான்மை சமூகம் விளங்கிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக யுத்த வெற்றியே சிறுபான்மை சமூகங்களுக்கான தீர்வு என ஒரு சில இனவாத அரசியல்வாதிகள் என்னிக் கொண்டிருக்கின்றனர். அப்படியான ஒரு என்னக் கருவில் உண்டானதுதான் சிறுபான்மை சமூகங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பது தொடர்பான சட்டத்திருத்த யோசனையாகும்.
1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் யோசனைக்கமைய அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரமதாஸா அவர்களினால் 12.5 வாக்கு வீதமாக இருந்த அரசியலமைப்பை மாற்றி 5 வீதமாக குறைக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன் மூலம் சிறுபான்மை சமூகங்களும் சிறிய கட்சிகளும் இலகுவாக பாராளுமன்றம் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு தமது சமூகம் சார்ந்த பாதுகாப்பு, அபிவிருத்தி என்பன தொடர்பாக ஆட்சியாளர்களோடு பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையில்தான் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பலத்தை இல்லாமலாக்கப்படுவதற்கான பேரினவாதிகளின் நீண்டநாள் கனவை மெய்ப்பிப்பதற்கான நடவடிக்கையாகவே இந்த அரசியலமைப்பு திட்ட யோசனையை பார்க்க முடிகின்றது.
இந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படால் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதோடு எமது குரல்வளையும் நசுக்கப்படும் மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தனது கொள்கைப் பிரகடன உரையில் தேர்தல் முறைமை தொடர்பாக கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் எப்படியான நிலைப்பாட்டில் இக்கருத்தை முன்வைத்தார் என்பது தொடர்பாக ஆராயப்பட வேண்டும். ஏனென்றால் சிறுபான்மை சமூகங்கள் ஜனநாயக ரீதியில் தமது பிரதிநிதிகளை பெற்றுக் கொள்வதற்கு தற்போது காணப்படும் விகிதாசார முறைமையே காரணமாகவுள்ளது.
விகிதாசார தேர்தல் முறைமையை தொடர்ந்தும் செயற்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும். இதற்காக சிறுபான்மை கட்சிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை அழைத்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.
எனவே சிறுபான்மை சமூகங்களிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள திருத்த யோசனைக்கு எதிராக சகல சிறுபான்மை கட்சிகளும் ஒன்றிணைவதோடு இராஜதந்திர ரீதியில் அணுகி அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.