கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் கட்டாயம் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளின் சுத்தம், சுகாதாரம் கட்டாயம் பேணப்பட வேண்டும் என்றும் அறுக்கப்படுகின்ற ஆடு, மாடுகள் முறையாக கொள்வனவு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்விதிமுறைகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் மாநகர சபையினால் வழங்கப்படும் வியாபார அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என்றும் மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது விடயமாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற இறைச்சிக்கடைகளில் அளவை, நிறுவையில் மோசடி இடம்பெறுவதாகவும் சுத்தம் பேணப்படுவதில்லை எனவும் நுகர்வுக்குதவாத இறைச்சிகள் விற்கப்படுவதாகவும் இன்னும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் பொது மக்களிடம் இருந்து நிறைய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
இவற்றை கவனத்தில் கொண்டு சுகாதார வைத்திய அதிகாரி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சில ஒழுங்கு விதிகளை கண்டிப்பாக அமுல்படுத்த தீர்மானித்துள்ளோம்.
ஆகையினால் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் கட்டாயம் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவ்விறைச்சிக் கடைகளின் சுத்தம் முழுமையாக பேணப்பட வேண்டும் என்பதுடன் மனித நுகர்வுக்குதவாத இறைச்சிகள் விற்பதையும் திருட்டு மாடுகள் அறுப்பதையும் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
இவற்றை உறுதி செய்வதற்காக கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனைகளை மேற்கொள்வார்கள் என்பதையும் இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது விதிமுறைகளை மீறி செயற்படும் இறைச்சிக் கடைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் உரிமையாளர்கள் மீது எவ்வித தயவும் காட்டப்படாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் மாநகர சபையினால் வழங்கப்படும் வியாபார அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன்" என்று கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.