உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதானோரில் 12 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் செவ்வாய்க்கிழமை( 07) எடுத்துக்கொள்ளப்பட்டது.கடந்த சில வாரம் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த பின்னர் மீண்டும் இன்று விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விளக்க மறியலில் வைக்கப்பட்ட சந்தேநபர் ஒருவர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக 3 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட நிலையில் தடுப்புகாவல் நிறைவடைந்துள்ளதாக சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு தெரியப்படுத்தினார் .
மேற்படி விசாரணைக்காக வந்த சந்தேக நபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைதாகி பல மாதங்களிற்கு மேலான விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.மேலும் பொலிஸாரின் ஆட்சேபனை காரணமாக அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி , கல்முனை,சாய்ந்தமருது ,சம்மாந்துறை ,உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இதில் கல்முனை இசாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களிற்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.