மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம்
எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கடந்த கால மனக்கசப்புகளால் கல்முனை பிரதேசத்தின் தமிழ் - முஸ்லிம் உறவில் ஏற்பட்டுள்ள, விரிசலை சில அரசியல்வாதிகள் சுயநலத்திற்காக பாவிப்பதை கைவிட வேண்டுமென சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.
சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அல் - சுபைதா ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் இந்த சமூக மாற்றம் மற்றும் அபிவிருத்திக்கான மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கல்முனை மாநகரசபை சுயேச்சைக் குழுக்களின் தலைவர் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா, அதன் அங்கத்தவர்கள்,உலமா சபைத் தலைவர் உட்பட அங்கத்தவர்கள் மற்றும் காரைதீவு பி.ச. உறுப்பினருட்பட பெருந்திரளான பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய அவர்,
கல்முனை பிரதேச செயலக பிரச்சினையை வைத்துக் கொண்டு சில அரசியல்வாதிகள் இருபுறமும் பேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய நிலையிலிருந்து தமிழ் - முஸ்லிம் மக்கள் விடுபட்டு கல்முனைப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கும் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும் தேசிய நல்லிணக்கம், பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடனும் நிலையான பொருளாதார அபிவிருத்தி என்ற புதிய அரசின் கொள்கைக்கேற்பவும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் புறையோடிப்போயுள்ள பிரச்சினைகளை எதிர்காலத்தில் சமூகங்கள் இணைந்து தீர்த்துக் கொள்வதற்கான பொறிமுறைகளும் இந்த அமைப்பினூடாக வகுக்கப்படவுள்ளன. இவ்வாறான பிரச்சினைகளில் அரசியல்வாதிகள் இலாபம் தேடும் விதமாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்கது.
அத்துடன் எமது பிரதேசத்தின் முக்கிய தேவையான சாய்ந்தமருதுக்கான நகர சபையைப் பெறும் விடயம் இன்று இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.இந் நிலையில் இச்சபை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் எமது பள்ளிவாசலும் உறுப்பினர்களும் ஏனையோரும் அதற்கான சகல வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோன்று கல்முனைப் பிரதேச மீனவர்களின் பிரச்சினைகளான சாய்ந்தமருது படகு இறங்குதுறையை மிக விரைவில் அமைப்பதற்கான முன்மொழிவும் இந்த அலுவலகத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் பிரதேச செயலகம் ஊடாக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனால் எமது ஆழ்கடல் மீனவர்கள் பலன் பெறவுள்ளனர்.
அதுமட்டுமன்றி, ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைக்கவும் இந்த அலுவலகம் முயற்சிகளை மேற்கொள்ளும். பெருந்தொகையான இளைஞர் - யுவதிகள் இதில் தொழில்வாய்ப்பைப் பெறுவர்.
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பிரதேசத்தில் புறையோடிப் போயுள்ள வீடில்லாப் பிரச்சினை மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு போதியளவு வீடு வழங்கப்படாத குடும்பங்களுக்கான வீடுகளை வழங்கல், வொலிவோரியன் கிராமத்தை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல முன்மொழிவுகளையும் இந்த அலுவலகம்சமர்ப்பிக்கவுள்ளது.
அத்துடன் போதைப்பொருளுக்கு அடிமையானோரை புனர்வாழ்வளிக்கும் பொருட்டு, தேசிய ஔடத அமைப்புடன் இணைந்து இந்த அமைப்பு செயற்படவுள்ளது. இதற்கான முன்மொழிவும், போதைவஸ்த்துக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும் சுற்றுச் சூழல் சம்பந்தமான இயற்கை நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கான செயற்றிட்டத்தை மேற்கொள்வதற்கு பிரதேச செயலகம் மூலம் முன்மொழிவுகளை சமர்ப்பித்தல், பல நீண்ட காலத் திட்டங்களை மேற்கொள்வதும் இந்த அலுவலகத்தின் செயற்பாடுகளாகவுள்ளன.
பொதுமக்கள், அரச ஊழியர்களது அன்றாட பிரச்சினைகளுக்கு வேண்டிய சந்தர்ப்பங்களில் வழிகாட்டல்களை வழங்கி அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நிலையமாகவும் இவ்வலுவலகம் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.