ஊடகவியலாளர், எழுத்தாளர், அறிவிப்பாளர், இலக்கியவாதியாகப் பவனிவந்து சுடர் ஒளியாகப் பிரகாசித்த மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மறைவு, ஊடகத்துறைக்கு மட்டுமல்ல எழுத்துத் துறைக்கும் பாரிய இழப்பாகும் என, அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளது.
சம்மேளனத் தலைவர் எம். நிஜாமுதீன், செயலாளர் ஐ.ஏ. காதிர் கான் ஆகியோரினால் இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது ஊடகத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலானோர் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் மாணவனாக அல்லது நண்பனாக இருந்து பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
அவர் எப்போதும் யாரோடு கதைத்தாலும், மற்றவர்களை ஊக்குவிக்கும் விதமாகக் கதைக்கக் கூடியவர். மிக நிதானமாக பண்பாட்டுடன் நடந்துகொள்ளக் கூடிய ஒருவர்.
கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமாப் பட்டம் பெற்ற புகழ்பூத்த விஞ்ஞானப் பாட ஆசிரியராவார்.
பாணந்துறை, ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லூரி, தொட்டவத்தை அல் பஹ்ரிய்யா பாடசாலை, களுத்துறை வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் இவர் கடைமயாற்றினார்.
நாடு தழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை வானொலியில் "ஹலோ உங்கள் விருப்பம்", "பரவசப் பயணம்", "அறிவுக் களஞ்சியம்" போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராகத் திகழ்ந்த மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி, நாடு தழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களைப் போதிப்பவராகவும் இருந்து வந்தார்.
வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் இவர் மக்கள் மனதில் இடம்பிடித்தவராவார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் மிக நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி முன்வைப்பாளராகவும், அத்துடன் பத்திரிகைத் துறையிலும் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான ஊடகவியலாளர்களும் எழுத்தாளர்களும் இன்னும் இன்றும் வாழும் காலத்தில் வாழ்த்திக் கெளரவிக்கப்படாமல், இலை மறை காயாகப் பார்க்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மறைந்ததன் பின்பு அனுதாபங்களைத் தெரிவிப்பதை விட, இவர்களை வாழும் காலத்திலேயே வாழ்த்துவதுதான் காலத்தின் தேவையும் பொருத்தமானதுமாகுமென, எமது சம்மேளனம் கருதுகிறது.
மர்ஹூம் ஜிப்ரியை இழந்து பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், எமது சம்மேளனத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.