சமூக ஐக்கிய கோட்பாடுகளில் ஒன்றித்துள்ள தேசிய காங்கிரஸ்


ஐ. ஏ. காதிர் கான்-
பௌத்த, சிங்கள மக்களை அதி பெரும்பான்மையாகக் கொண்டுள்ள எமது நாட்டில் சிறுபான்மைத் தலைமைகளின் செயற்பாடுகள் உணர்ச்சிவசப்பட்டதாக இருக்கக் கூடாது. உணர்ச்சி வசப்படுவதும், உசுப்பேற்றப்படுவதும், பல்லினங்கள் வாழும் எமது நாட்டில் சிறுபான்மையாக வாழ்வோரின் இருப்புக்களை சந்தேகத்திற்குள்ளாக்கும்.
இதற்காகவே நாட்டின் தற்போதைய நிலைமைகள் எப்போதும் ஏற்படக் கூடாதென்பதில், கடந்தகால முஸ்லிம் தலைமைகள் கவனமெடுத்துச் செயற்பட்டதாக, இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த, திலங்க சுமதிபால ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

பெரோஸா முஸம்மில் தலைமையிலான "காந்தா சவிய" (மகளிர் சக்தி)
அமைப்பு ஏற்பாடு செய்த பாடசாலைச் சிறுவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய இவர்கள் தெரிவித்த கருத்துக்கள், நாட்டின் இன்றைய நிலைமைகளுடன் எவ்வளவு பொருத்தப்பாட்டுடன் உள்ளதென்பதையே சிந்திக்க வேண்டியுள்ளது.
அரசியலுக்காக இனத்துவங்களை அடையாளப்படுத்தல், இளைஞர்களை உசுப்பேற்றல், மத உணர்ச்சிகளை மேலிடச் செய்தல், இன உணர்வுகளைக் கிளறிவிடல், அதிகாரங்களை இலக்கு வைத்து காய்களை நகர்த்தல் என்பன, சிறுபான்மையினரை ஆபத்தான கட்டங்களுக்குள் மாட்டிவிடும். முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள இன்றைய அச்ச நிலைக்கும், இவ்வாறான அரசியல் சிந்தனைகள்,போக்குகளே காரணமாகும். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்களின் நிலைப்பாடுகளும் இதுவாகவே இருந்தன. அதிகாரங்களை இலக்கு வைத்து அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளாது, அபிமானத்தை வெல்வதற்காக உழைப்பதுதான் தென்னிலங்கையில் பெரும்பான்மையினர் மத்தியில் சிறுபான்மையாகச் சிதறி வாழும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது.இந்த அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொண்ட முஸ்லிம் தலைமையாக, இன்று தேசிய காங்கிரஸ் மட்டுமே உள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால கூறியிருந்தார்.

சிறுபான்மைச் சமூகங்கள் ஓரணியில் ஒட்டு மொத்தமாக இணைந்து தமிழர்களின் உரிமை என்றும், முஸ்லிம்களின் மத உணர்வுகள் என்றும், ஒன்றித்துக் குரல் எழுப்பிய 2015 ஆம் ஆண்டுதான், சிங்கள மக்களின் விழிப்புக்கு வித்திட்டது. இந்தக் காலகட்டத்தில் எவ்வித கலக்கமும் இல்லாது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்த தேசிய காங்கிரஸின் தலைமை, தென்னிலங்கைக்கு பல முக்கிய செய்திகளை சொல்லியது. பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்புக்கு மாறாக செயற்பட முடியாது, அதிகாரங்களுக்காக கட்சி தாவி நம்பிக்கை மோசடி செய்வது தர்மமாகாது, பயங்கர வாதத்தை ஒழித்து நாட்டு மக்கள் எல்லோரையும் நிம்மதியாக வாழவைத்த, சிங்களத் தலைமையை நிராகரிப்பது, பெரும்பான்மையினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பவையே அவற்றில் சிலவாகும். இவ்விடயத்தைச் சுட்டிக்காட்ட இராஜாங்க அமைச்சர் சுமதிபால தயங்கவில்லை. 

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான சிங்கள சமூகத்தின் முஸ்லிம்கள் மீதான சந்தேகங்கள் தணிவதற்கு, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாஹ்வின் அரசியல் வழி நடத்தல்கள் பிரதான பங்களித்ததாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல, நாட்டில் ஏற்படவிருந்த சிங்கள, முஸ்லிம் முறுகல்களை இவ்வாறான முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகளே அரணாகச் செயற்பட்டு தடுத்திருந்ததையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணைகளைப் பெற்றுக் கொண்ட தனித்துவ தலைமைகள் கரையோர மாவட்டம், முஸ்லிம் தனியலகு, தனியான மாகாணம் என்ற கோஷங்களால் முஸ்லிம் சமூகத்தை உணர்ச்சியூட்டியதை சிங்களப் பெரும்பான்மையினர் சந்தேகத்துடனே நோக்கினர். ஆயுத ரீதியிலான பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மத ரீதியிலான அடிப்படைவாதம் வளர்வதாகவே இக்கட்சிகளின் கோஷங்களை தென்னிலங்கை நோக்கியது. இதனால், தங்களைப் பாதுகாப்பதற்கான அதி சிறந்த தலைமையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர, இவர்களுக்கு வேறு வழிகள் இருக்கவில்லை. 

எனவே, அதி பெரும்பான்மை இனத்தவரின் ஆதரவுகளால் மாத்திரம் ஒரு அரசாங்கமோ அல்லது ஜனாதிபதியோ தெரிவாவது, இன ஐக்கியத்தின் இடைவௌிகளை அதிகரிக்கச் செய்யலாம். இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், சிறுபான்மையினர் செய்ய வேண்டிய அடுத்த கட்ட நகர்வுகள் என்ன? பெரும்பான்மையினரின் விருப்பத்துடனான அரசாங்கத்தைத் தெரிவு செய்வதே, இச்சமூகங்களுக்கு கிடைக்கவுள்ள அவசரமான பாதுகாப்பாகும்.குறிப்பாக, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாலும், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களிடம் மதவாதம்
எழுச்சியடைந்துள்ளதாக சிங்கள மக்கள் அஞ்சும் நிலையிலும், பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்களின் அரசியல் விருப்புடன் இயைந்து செல்லும் முஸ்லிம் தலைமைகளைப் பின்பற்றுவதே பொருத்தமாக இருக்கும். இதுபற்றி உணர்த்தும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர், சுசில் பிரேம் ஜயந்தவின் உரை அமைந்திருந்தது.எந்தக் கட்சியிலிருந்தாலும், அன்றைய முஸ்லிம் தலைவர்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் நன்மதிப்பை வென்றெடுக்கும், சிங்கள மக்களும் அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொள்ளும் அரசியல் வழிமுறைகளையே டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத், சேர் ராஸிக் பரீட், ரீ.பி. ஜாயா மற்றும் எம்.ஏ. அஸீஸ்
போன்ற தலைவர்கள் முன்னெடுத்ததாகக் கூறினார்.

இந்த நம்பிக்கைக்குரிய அந்திமகால முஸ்லிம் தலைவராக மர்ஹூம் அஷ்ரஃப்பை நோக்கிய தென்னிலங்கைச் சமூகம் அவரின் மறைவுக்குப் பின்னர், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வைப் பார்ப்பதாகவும் நினைவூட்டினார்.இதுபற்றித்தான் முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.இதனை உணர்ந்துதான், அன்று 1999 இல் மர்ஹூம் அஷ்ரஃப், ஸ்ரீீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சகல இன மக்களையும் அரவணைக்கும் தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்தார். இந்த வித்திலிருந்துதான் தேசிய காங்கிரஸை ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் ஆரம்பித்துள்ளார். இவற்றை உணர்த்தும் வகையில் இராஜாங்க அமைச்சர்கள், தங்களது உரைகளில் தௌிவு படுத்தியமை, தேசிய காங்கிரஸின் அரசியல் சிந்தனைகளுக்குப் பொருத்தமாக இருந்தன.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் புதிய அரசியல் போக்குகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. நாட்டிலுள்ள இருபது இலட்சம் முஸ்லிம்களில், மூன்றிலிரண்டு பங்கினர் வாழும் தென்னிலங்கை முஸ்லிம்களின் சௌஜன்ய வாழ்வுக்கு, தனித்துவ அரசியல் சிந்தனைகள் வழி வகுக்காதென்பதே அவையாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -