பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு ஒன்று கிடைக்கும் என கூறி வந்த நிலையில் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்போவதாக நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் 15.01.2020 அன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான இந்த அரசாங்கத்தில் சொல்வதையே செய்வோம், செய்வதையே சொல்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது.
அந்தவகையில் கடந்த கால அரசாங்கத்தில் பின் தள்ளப்பட்டு வந்த தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு தொடர்பில் புதிய அரசாங்கம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு அமைய பொங்கல் தினமான இன்று தோட்ட தொழிலாளர்கள் சந்தோஷப்படும் விதத்தில் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு நிச்சயம் வழங்கப்படும் என்ற பொங்கல் பரிசினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்ந்து மலையகத்தில் பல்கலைகழகம், கல்வித்துறை, வீடமைப்பு என பல்வேறுப்பட்ட அபிவிருத்திகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்படும் என்பதில் தாம் உறுதிப்பூண்டுள்ளதாகவும் அமைச்சர் தொண்டமான் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போகும் இந்த ஆயிரம் ரூபாய் தொடர்பில் மாற்றுக்கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கலாம். மார்ச் முதலாம் திகதி தானே தருகின்றார்கள் என்று சொல்லலாம்.
ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை கொடுப்பதற்கு மலையகத்தை முகாமைத்துவம் செய்யும் 22 கம்பனிகளிடம் அரசாங்கம் உள்ளிட்ட தானும் பேசியதாக தெரிவித்த அவர், நாட்டில் வரி சலுகைகளை இந்த புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இவ்வாறான சலுகைகளை வழங்கி இந்த ஆயிரம் ரூபாவை தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் பேசப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.