2017 ஆம் ஆண்டு குத்தகைக்குப் பெறப்பட்ட A330-200 ரக விமானம் தொடர்பாக முற்றிலும் புதிய விளக்கத்துடன் கூடிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு, சுற்றுலா மற்றும் விமானத்துறைக்கான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது செயலாளரைப் பணித்துள்ளார்.
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் விமான என்ஜினியர்கள் சங்கத்தினருடன், கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையையடுத்தே, அமைச்சர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.
"குறித்த விமானம் பறப்பதற்குத் தகுதியானதல்ல" என்று விமான என்ஜினியர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையிலேயே, முன்னைய அரசாங்கம் இவ்விமானத்தை குத்தகைக்கு எடுத்திருந்ததாக, மேற்படி பேச்சுவார்த்தையின் போது தெரிய வந்துள்ளது.
எயார் போர்சுகல் பயன்படுத்திய இந்த விமானத்தை, ஸ்ரீலங்கன் எயார் லைன்சின் இரண்டு பொறியியலாளர்கள் பரிசோதனை செய்தனர்.
அதனையடுத்து, அது முன்னைய அரசாங்கத்தால் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது என்றும் ஆனால், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பிரதிநிதிகள் எவரும் இந்தப் பயணத்தில் பங்கேற்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட விமானம் 2017 இல் கொண்டுவரப்படவிருந்த போதிலும் 2018 இலேயே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டதாக, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சருக்கு விளக்கினர்.
எனினும், குறிப்பிட்ட விமானம் தரக்குறைவு காரணமாக தரையிலேயே இருக்க வேண்டியிருந்ததால், மாதாந்தக் குத்தகையாக 5,85,000 அமெரிக்க டொலர்களை ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் செலுத்த வேண்டியிருந்ததாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே, விமான என்ஜினியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைப் புறக்கணித்துவிட்டு புதிதாக அறிக்கையொன்றைக் கேட்டுப்பெறுமாறு, அமைச்சர் தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது.