மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் மு.காவினை ஸதாபித்து முதல் கூட்டத்தை நடத்தியது தொடக்கம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் கும்பலை காட்டிக்கொடுத்தது வரை சாய்ந்தமருது மண் சமூக மாற்றத்திற்கான பூமியாக திகழ்கின்றது என ஏற்றுமதி மூலோபாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் சமூக மாற்றத்திற்கும் அபிவிருத்திற்குமான மய்யத்தின் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வு இன்று (05) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்;ந்து உரையாற்றுகையில்,
தற்போதுள்ள அரசியல் தலைமைகளின் இழுத்தடிப்பும், ஏமாற்றும் நடவடிக்கை, தன்னலத்தை மையமாக வைத்து செயற்படுதல் போன்ற நடவடிக்கைகளினால் மக்கள் அவர்கள் மீதும் இன்று நம்பிக்கை இழந்துள்ளனர். இவர்களின் இவ்வாறான செயற்பாட்டினாலேயே எம்மைப் போன்ற அரச அதிகாரிகள் அரசியலுக்குள் வரவேண்டியுள்ளது. இதனை மக்களும் விரும்புகின்றனர்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை காத்தான்குடியில் ஸ்தாபித்து போதும் முதல் கூட்டத்தை சாய்ந்தமருதில் நடத்தினார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததுடன் தனிக்கட்சியின் அவசியம் உணரப்பட்டு மாற்றம் ஏற்பட்டது.
சாய்ந்தமருதில் மறைந்திருந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் கும்பலை காட்டிக்கொடுத்து நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் ஆபத்தை தடுத்து நிறுத்தியதுடன் முழு முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்த ஊர் சாய்ந்தமருதாகும். இவ்வாறான மாற்றத்தின் ஊடாக சமூக அபிவிருத்தியை கொண்டு வரும் பூமியாக சாய்ந்தமருது திகழுகின்றது எனவும் தெரிவித்தார்.