க.கிஷாந்தன்-
மலையக தியாகிகள் தினம் (10.01.2020) அன்று பெருந்தோட்டப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் பொது சுடரை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன், நிகழ்வின் போது, அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'கள்ளத்தோணி' நூல் வெளியிடப்பட்டது.
அத்தோடு, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றது.
அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மலையக உரிமை குரல் தலைவர் ராமச்சந்திரன் சனத், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், ஊடகவியலாளர்கள், தியாகிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.