சட்ட விரோதமாக சிகரெட்டுக்களைக் கொண்டு வந்த இரு இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (04) அதிகாலை 5.30 மணியளவில் அபுதாபியிலிருந்து UL208 எனும் விமானத்தில் கட்டுநாயக்க வந்த 28 மற்றும் 38 வயதுடைய இரு ஆண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர், சுங்க அத்தியட்சகர் லால் வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
இதன்போது, 287 கார்ட்டன்கள் மற்றும் 129 பைக்கற்றுக்களில் காணப்பட்ட 59 ஆயிரத்து 980 (59,980) சிகெரெட்டுக்களைக் கடத்த முயன்றபோது, சுங்கத்திணைக்களத்தினர் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சிகரெட்டுகள் 35 இலட்சத்து 98 ஆயிரத்து 800 ரூபாய் (3,598,800) பெறுமதியுடையவை எனவும், அவை அவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் லால் வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுங்கக் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கண்காணிப்பாளர்களால் இது கண்டறியப்பட்டுள்ளதோடு, சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களான கே.எம். றிஸ்வி மற்றும் திருமதி சஜீவனி ஆகியோரின் வழிகாட்டலின் அடிப்படையில் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும், சுங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் லால் வீரக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.