முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளம் இன்னும் தோற்றுப் போகவில்லை!


எம்.எம்.எம் - நூறுல்ஹக்
சாய்ந்தமருது-05-

லங்கை முஸ்லிம்களுக்கு “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் தேவை இல்லை என்போர் இன்று சற்று கூடி வருவதை நாம் அவதானிக்கலாம் இது “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் ஒரளவு அச்சமூகத்திடம் கூடு கட்டத் தொடங்கிய 1985களிலிருந்து இன்று வரை வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு தொடர்ந்தேர்ச்சியான செயற்பாடாக இருந்து வருவதும் மறைவன்று - ஆகவே இந்தக் கோஷம் முஸ்லிம் அரசியல் களத்திற்கு புதியதல்ல.
இந்த கருத்தாடலுடன் மேலும் இரண்டு அம்சங்கள் புதிதாக இணைத்து மேற்கிளப்பப்பட்டு, பேசுபொருளாக மாற்றம் பெற்று வருகின்றது. ( 1) “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் தமது செயற்பாடுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்வைகளாக இருந்து கொள்ள வேண்டும். (2) இன்று இருக்கும் “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் யாவும் ஒரணியில் இணைந்து செயற்படுவது என்பதே அவை.

01 முஸ்லிம் மக்களிடம் “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சி வேண்டும் என்கின்ற எண்ணப் பாடுகடந்த 1985களுக்குப் பின்னர் தான் முளைத்தது என்று எம்மிற் சிலர் நம்புகின்றனர். உண்மை நிலை அதுவல்ல. கடந்த 1956 களிலிருந்து இந்தச் சிந்தனையும், தாகமும், தேவையும் தோன்றி கருக்கட்டத் தொடங்கி விட்டது. அது பற்றிய ஆய்வு தனியாக எழுதப்பட வேண்டிய ஒன்றாகும். உதாரணத்திற்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே உள்ள முஸ்லிம்களினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் லீக் கூட முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளப் பின்னணியில் உருவானதே. அது பின்னர் ஐ.தே.கட்சியின் ஊதுகுழலாக மாறிய பெரும் கதையும் இதற்குள் இருக்கிறது.
ஒரு சிந்தனையின் கருக்கட்டலின் அறுவடையை உடன் நுகர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிக அரிதாகும். மாறாக அதன் நகர்ச்சிக்கு ஊன்று கோலாக இருக்கும் பின்னணிக் காரணங்கள் வலுவடைந்து, அதன் மூலமான விளைவுகள் பெருகி, அதனை அனுபவிக்கும் மக்களிடம் தான் அது வேரூன்றி பால பலன்களை விளைவிக்கும் என்கின்ற பொதுவான அடிப்படையில் தான் முஸ்லிம் சமூகத்திடம் உருவான தனித்துவ அரசியல் அடையாளத்தையும் ஏற்றி வைத்து வாசிப்பு செய்கின்ற போது இதன் விரிவுத்தளம் துலங்கும்.

அது போன்றுதான் 1985 களில் தோற்றம் பெற்ற “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் வெற்றி பெற்று கொள்ள காரணங்கள் மலிந்து காணப்பட்டன. இதனால் முஸ்லிம் சமூகம் ஒரளவு தமது தேசியத்தில் பற்றும், பிடிப்பும் கொள்ளத் தொடங்கியது. ஆகவே “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் எங்கே செயற்பட வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தவிர மாற்று அரசியல் கட்சியில் இருந்து கொண்டு விமர்சிக்க முனைவது ஒரு விவேகமான அணுகுமுறைமையாக இராது.

“முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சி வலுப்பெற்ற காலத்தில் காணப்பட்ட காரணங்களில் ஒன்றினை மட்டும் குறித்துரைத்து அது தீர்ந்து விட்டது.இனி தேவை இல்லை என இடித்துரைக்க முனைவது ஓர் ஆரோக்கியமான நிலைப்பாடல்ல. ஆயினும் 1985 களில் வலுப்படுத்திய காரணங்கள் என்பனவற்றில் ஒன்று கூட அதன் அச்சத்திலிருந்து முழுமையாக விலகிவிடவில்லை. மற்றும் அதன் மோசமான விளைவுகள் வெவ்வேறு வடிவத்திலேனும் இன்னும் இருப்பு கொண்டே இருக்கின்றது - இவற்றுக்கு பின்வரும் உதாரணங்கள் சில சான்றுகளே.

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும் தனித் தரப்புக்கும் வசதியாக வழியாகும் தேவை, காணி அபகரிப்பும் அதன் விடுவிப்பும், தமது மத, கலாசார விழுமியங்களை முழுமையாக அதுவும் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பின்பற்றுவதற்கு பூரண அனுமதி இல்லாமை, இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பீடுகள் சிங்கள, தமிழ் பேரினவாத நெருக்கடிகள், இன, சொத்து அழிப்பு நடவடிக்கைகள், விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் நமது மக்களுக்கு உரித்தாக வேண்டிய நாடாளுமன்ற உறுப்புரிமையை உறுதி செய்து கொள்வதற்கு, நமது பிரச்சினையை பேசுவதற்காக சுதந்திர இயல்பு தன்மையை கொண்டிருப்பது போன்ற காரணங்கள் மிகத் தீவிரம் அடைந்த ஒரு காலகட்டமாக நமது நாடு 1985களின் பின்னர் ஆனாதினாலும் இதன் அகோரங்கள் முஸ்ஸிம் சமூகத்தை வெகுவாக ஆக்கிரமித்துக் கொண்டது. இதன் விளைவாகவே “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் காலூன்றிய காலமாக 1985கள் மாறியது என்பதுதான் உண்மை.

இவை போன்ற காரணங்களினால் அதிகரித்த தேவையாகிப்போன “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சியின் தேவைகளில் எதுதான் இதுவரை தீர்க்கப்பட்டதாக அமைந்திருக்கிறது என்பதை திட்டவட்டமாக ஆதாரப்படுத்திய பின்னர்தான் “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளின் தேவை இல்லை என்று உரைப்பதற்கு முன் வரவேண்டும். இந்நிலை தோற்றுவிக்கப்படாத சந்தர்ப்பத்தை வைத்துக் கொண்டு தேவை இல்லை என்று பறைசாற்றத் துணிவது அறிவுடைமையாகாது.

இலங்கை முஸ்லிம்களின் இனப்பிரச்சினை என்பது தமிழரின்ஆயுதக் குழுக்கள், தமிழர்களின் அரசியில் கட்சிகளின் கடும்போக்குகள் மற்றும் அவர்களின் தீர்வு கோணங்களின் எதிர்பார்ப்பு என்பனவற்றில் மட்டும் தங்கி இருக்கின்ற ஒன்றல்ல. மாறாக அது சிங்கள மக்களின் குண்டர்களினால், பெளத்த பேரினவாத ஆதிக்க சக்தி செயற்பாட்டாளர்கள், இதற்கு துணையாக அமைகின்ற சிங்கள மக்களின் அரசியல் கட்சிகள், நாட்டில் அமையும் சிங்கள அரசாங்கத்தின் கடும்போக்கு என்பனவற்றின் நசுக்கு வாரத்தின் பின்னணியிலும் பிணைந்து இறுகி காணப்படுகின்ற ஓர் அம்சமுமாகும்.
ஆகவே, தமிழரின் எதிர்பார்ப்புக்கு செவிசாய்க்காத ஒரு சிங்கள பேரினவாத அரசாங்கம் ஏற்படுவதன் ஊடாக முஸ்லிம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கு எம்மிற் சில அரசியல் செயற்பாட்டாளர்கள் முன்வருவது என்பது முஸ்லிம் பிரச்சினைகளை சரியாக அடையாளம் காணத் தவறியவர்களாகவும், முஸ்லிம்களுக்கு உண்மையான தீர்வு யாது என்பதில் போதிய தெளிவும் விளக்கமும் குறைந்தவர்களாகவே இருக்கின்றனர் என்பதைத்தான் நமக்கு செய்தியாக்குகின்றனர் .இதனை நாம் புரியாது அவர்களின் பிழையான நெறிப்படுத்தலின் பின்னாள் அள்ளுண்டு செல்வதென்பது எம்மை அழித்துக் கொள்ளுவதற்கும் அவலங்களை சுமையாகச் சுமப்பதற்கும் எம்மை அறியாமலே பலி ஆகின்றோம் என்ற புரிதல் இங்கு முக்கியமாகின்றது.

தமிழ் மக்களின் கோரிக்கையில் சிங்கள், முஸ்லிம் மக்களினது உரிமையில் ஆதிக்கம் செலுத்தாதவற்றின் கோணத்தையாவது ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் அற்ற ஒரு சிங்கள பேரினவாத மேலாதிக்க சிந்தனையில் கட்டமைக்கப்படும் அரசாங்கத்தினால், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக அமைய முடியாது என்கின்ற யதார்த்தம் இதற்குள் இருப்பதை மறுக்க முடியாது. ஆயின் கடும்போக்கான இனவதம் அற்ற அரசாங்கம் அமைந்திருக்கும் சுழல் இன்று வாய்த்திருக்கிறது என்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாத இன்றைய நிலையில், நடுநிலையான ஒரு சிங்கள மக்களின் அரசாங்கம் அமைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் எப்படி “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” நகர்வை நகர்த்த வேண்டி கோணத்திற்கு எதிரான அறைகூவலை விடுப்பது விவேகமான வழிமுறையாகுமா?

“முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளை முஸ்லிம் சமூகத்தின் ஒரு பெரும் பகுதியினர் அங்கீகரித்து கொண்டது மட்டுமன்றி அது வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேயும் ஆதரித்துக் கொள்ளும் நிலை விரிவடைந்திருக்கும் இன்று வரையான நகர்வுகளை அனுபவரீதியாக புரிந்து கொள்ளும் வகையில் “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளுக்கென்றும் வாக்கு வங்கித்தளம் கொண்டதாக அமைந்திருப்பதன் நிலையில், “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளம்” தேவையா? என்ற கேள்வியும், அதன் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் வரையறுக்கப்படுதல் வேண்டும் என்ற அபிப்பிராயமும் முன்வைக்கப்படுவது முறையானதும் நேர்மையானதும் ஆன நிலையாகி விடாது என்பதை நாம் உறுதியாக நம்பியாக வேண்டும்.

02 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இயற்கனவே, நமது நாட்டில் அமைந்திருந்த ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியின் இறுதிப் பகுதியில் அரசியல் குழப்பம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள 52 நாட்களின் (கடந்த 2018 ஒக்டோபர்) போராட்டத்தின் போதே இவ்விரு கட்சிகளும் ஒருமித்து பயணித்துக் கொள்ளும் போக்கிற்கு உட்பட்டு விட்டது. மேலும் நடந்து முடிந்த எட்டாவது ஜனாதிபதித் தேர்தலிலும் இக் கூட்டு ஒருமித்தே பயணித்தது. அதன் பிற்பாடு எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் சஜித்அணியை ஆதரிப்பது என்ற கருத்தையே அங்கும் இங்குமாக இவ்விரு கட்சிகளும் பதிவாக்கி வருகின்றது. ஆகவே, “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளின் கூட்டு என்ற வகையில் இவ்விரு கட்சிகளின் கூட்டு அவசியம் என்பது குறித்து பேச வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவை இரண்டு கட்சிகளும் இணைந்தே இருக்கின்றது.

ஆகையால், இவ்விரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமான விளைவுகளைத் தருமா? என்று தனித்து ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருந்து நாம் விடுபடுகின்றோம். ஏனெனில், “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் யாவும் ஒரே அணியில் இணைந்து செயற்படுவது நமக்கு நன்மையானதா? தீமையானதா? என்று ஆராயும் போது காணப்படும் இடறல்களும் அதற்கான மாற்று வழிகளும் தேடப்படும். இவை தான் அவ்விருகட்சிகள் மட்டும் இணைந்தாலும் அல்லது இயங்கும் அனைத்து “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளின் இணைவு பற்றி ஆராய்வதற்குள் எல்லாம் அடங்கி விடும் என்பதினால் பிரித் தில்லாது மொத்தமாக இந்தப் பதிவில் நோக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் எத்தனை இருக்கிறது என்பது நமக்கு முக்கியமல்ல. ஒன்று இருந்தாலும் அது முஸ்லிம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் அபிவிருத்திகளையும் செய்யக் கூடிய வல்லமை இருந்தால் போதும் என்கின்ற ஒரு கோட்பாடும், அதன் மீதான அதிகரித்த கரிசனையும் கொண்ட ஒரு காலம் நமது நாட்டில் இருந்து இருக்கிறது.
இதனால்தான் பெருந் தேசிய கட்சிகள் தத்தமது அணியில முஸ்லிம் அரசியல் பிரசன்னத்தை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சரவையில் கூட முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றனர். இது போதுமானதாக அன்றைய முஸ்லிம் அரசியல் களம் காணப்பட்டது. இதனால்தான் எந்த பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகள் அரசாங்கமாக வந்தாலும் அதில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்து வந்ததுடன், சிங்கள அரசாங்கத்தில் முஸ்லிம்கள் செல்லப் பிள்ளை என உட் கிடையாக பேசப்படும் நிலைகாணப்பட்டது.

இதற்கு இசைவாக அன்றைய அரசாங்கங்களின் தலைவராக இருந்தவர்களுடன் அக் கட்சி சார்பில் பிரதிநிதித்துவம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குமிடையில் ஒரு சிநேகபூர்வமான உறவு பாலம் உறுதியாக கட்டி எழுப்பப்பட்டிருந்தது. இது ஒரு வகையான அரணாக அன்று அமைந்தும் இருந்தது. இந்நிலை இன்றும் இருக்கிறது என நம்பிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பயணிக்க எத்தனிப்பது பேராபத்தான பயணம் என்பதை நாம் உணர்ந்தாக வேண்டிய கால கட்டமாகவே இன்றிருக்கிறது.

நமது நாட்டில் நிறைவேற்று செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமைக்கு 1978இல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வழிவகுத்தது இதன் பிற்பாடான 1980களிலிருந்து நமது இலங்கை நாட்டில் இனமுரண்பாடுகள் பெருகியும், இறுகியும் பிடிப்பு கொள்ளத் தொடங்கியது. இது தொடர்ந்தும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது தவிர தளர்ச்சியை திரும்பி பாக்கவே வழி விடவில்லை, இந்த அரசியல் மாற்றத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறைமையினால், சமூக ரீதியான அரசியல் பிரதிநிதித்துவங்கள் இங்கு வாழும் முஸ்லிம் மக்களின் தொகைக்கு ஏற்ற வகையில் அமைந்து கொள்ள வேண்டிய தேவையை வலியுறுத்தியது. இதனால் தான் “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளம்” முக்கியப்பட்டது. இதன் விளைவே “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளம்” வசப்பட்டது.
இந்தப் பின்னணியில் இருந்து ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான தொகைக்கு அண்மித்த வகையிலேயேனும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது.இதன் தேவை இன்னும் மறையவில்லை. இதனால் ஒரு பொதுத் தேர்தலில் அதிகரித்த முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தை எப்படி பெற வாய்ப்பிருக்கிறதோ அந்த வழிமுறையில் பெறுவதற்கு நாம் தயாராக வேண்டும். இதற்கு மாறாக பெருந்தேசிய கட்சிகளில் மட்டும் நமது இருப்பை சுருக்கிக் கொண்டால், உரிய நாடாளுமன்றமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அடைந்து கொள்ள முடியாது போய்விடும்.
சில இடங்களில் தனித்தும் பல இடங்களில் பெருந்தேசிய கட்சியில் தேர்தல் கூட்டு ஒப்பந்த அடிப்படையை பிரயோகித்தும் நமக்கு உரித்தாகக் கூடிய நாடாளுமன்ற உறுப்புரிமையை உறுதி செய்து கொள்க வேண்டிய நிர்பந் தம் நம் மீது இருக்கிறது. இதற்கு இசைவாக “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளின் இருப்பு நமக்கு அவசியப்படுகின்றது. இவ்வாறான கட்சிகள் ஒன்றிணைவது என்பது முதலில் ஒருமித்த இலக்கை அடைவதை, குறிக்கோளாக பற்றிக் கொள்வது, இரண்டாவது எந்தெந்த மாவட்டங்களில்ஒரே அணியாக போட்டியிடுவது, அதே போன்று தேசிய கட்சியில் எந்தெந்த மாவடங்களில் இணைந்து போட்டி இடுவது மற்றும் இதற்கு ஏதுவான தேசிய கட்சி எது என்ற தெரிவும் வேண்டும். சில இடங்களில் மூன்று வேட்பாளர்களை நமது “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளிலிருந்து எந்த உறுப்பினரை நிறுத்துவது, இதேபோன்று தேர்தல் கூட்டு ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் போட்டி இடும் இடங்களுக்கு நமது கட்சிகளிடையே இருந்து யாரை அபேட்சகராக்குதல் என்றும், நமது கட்சிகளில் தனித்து களமிரங்கும் இடங்களிலும் எந்த கட்சிக்கு எத்தனை ஆசனம் என்ற பங்கீடு என்பது குறித்தும் தெளிவான தீர்மானம் வேண்டும்.

இங்குதான் ஒன்றிணைவுகள் பிய்த்துக் கொண்டு பிணக்குப் படுவது ஆரம்பிக்கும். இதற்கு சரியான விட்டுக் கொடுப்பு மனோநிலை வேண்டும். இப்படியான தயார்படுத்துதல் இல்லாது இந்தச் சிந்தனை வெற்றி பெறாது. இந்த கவனம் “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளின் தலைவர்கள் , மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருக்கும் வரைதான் இதன் சாத்தியம் சத்தாக மாறும்.
உண்மையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்றில்லாது, பொதுவாகவே வரும் எந்த பொதுத் தேர்தலானாலும் நமக்குரித்தான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை எய்திக் கொள்வதில் குறியாக இருக்க வேண்டிய தேவை இன்னும் நமது நாட்டு அரசியல் களத்தில் இருந்து வருகின்ற ஒன்றாகும். அதிலும் குறிப்பாக “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” தேவை புறந்தள்ள முடியாத கள நிலவரத்தின், பெருந்தேசிய கட்சிகளில் நேரடி அரசியல் பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்துவது நமக்கு உகந்த பக்கம் அல்ல.
அவ்வாறு பெருந் தேசிய கட்சிகளில் நமது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதினால், நமது சுயத்தை இழந்துதான் இருப்பு கொள்ள வேண்டிய கையறு நிலையைத் தான் நமக்கு பேறுபெறாக்கி வைக்கும். ஆகவே “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் என்பது வெறும் அரசியல் பதவிகளை அலங்கரிப்பதற்கு தேவையான ஒன்றல்ல. அதுதான் நோக்கமெனில், தனிவழி அரசியலை விட்டுவிட்டு பெருந்தேசிய கட்சிகளில் நேரடியாக இணைந்து அரசியலில் ஈடுபடுகின்ற போது, இதனை விட அரசியல் பதவிகளை அடைந்து, அதிக சுகம் பெறலாம்.
முஸ்லிம் மக்கள் நெருக்கடிகளை சந்திக்கும் போது, சில அரசியல் தீர்வு முன்னெடுப்பின் போது, நமக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, நமது மத கலாசாரங்களுக்கு ஆபத்து வரும் வகையிலானதும் வேறு குறி வைத்து முஸ்லிம்கள் என்பதற்காக மட்டும் நலிவடையச் செய்யும் பாங்கிலான சட்டங்கள் இயற்றப்படும் போதும், இன சுதிகரிப்பு வன்முறைகள் நம் மீது கட்டாவிழ்த்து விடப்படுகின்ற போது அவற்றிலிருந்து பாதுகப்பு பெறுதல் போன்ற தேவைகளை நியாயபூர்வமாக சுட்டிக்காட்டி அஹிம்சை வழியிலும் நாட்டின் சட்ட திட்டங்களின் எல்லைக் கோட்டுக்குள் நின்று கொண்டு போராடும் திறனும், வீரமும், விவேகமும் நிறைந்தவர்களாக நமது அரசியல் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அதற்கு வசதியாகவும் சுயமாகவும் இயங்க வழிவிடக் கூடிய “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளும் அதன் வழி வந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அவசியமாகும்.

இதற்கு இசைவாக கடந்த 1989 தொடர்க்கம் 2000ம் ஆண்டு வரையான ஒரேயொரு முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாளசக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹும் சட்டத்தரணி எம்.எச்.எம் அஷ்ரஃப் தலைமையில் இயங்கியது. அவர் தலைமையில் நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவம் என்பன முஸ்லிம் தனித்துவ உரிமைகளை இழக்காது, தமது சுயத்தை தூரப்படுத்தாத அபிவிருத்திகளையும் நமக்கு செய்து தந்தனர்.அந்த வீரமும் விவேகமும் திறனும் வாய்க்கப்பெறாத கட்சிகளாகவே கடந்த 2000 இன் பிற்பாடு இருந்து இன்று வரை “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளும் அதன் தலைமைத்துவங்களும் அவர்களின் வழி வந்த நமது நாடாளுமன்ற அரசியல் பிரதிநிதிகளும் வாழ்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலை தொடர்வதற்காக “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகளின் இருப்பு நமக்கு அவசியப்படவில்லை. மாறாக கடந்த காலங்களை விடவும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிந்தனைகள் இன்று வலுப்பெற்று காணப்படுகின்றது. இது சில வேளை அரசாங்க இயக்கத்தினால்கூட நெருக்குவாரங்கள் அரங்கேற்றம் கண்டு விடுமா? என்கின்ற அச்சவுணர்வு மேலீட்டு காணப்படும் இந்நிலையில், நமது மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பை விடவும் துணிவும் விவேகமும் நிறைந்த தலைமைத்துவமும் அதற்கு இசைந்து ஒத்துழைப்பு நல்க கூடிய அரசியல் பிரதிநிதித்துவங்களுமே இன்றைய நமது தேடலாக அமைய வேண்டும்.
இதற்கு சரியொத்ததாக இல்லாவிட்டாலும் அண்மித்த குணாம்சங்களை கொண்ட ஆளுமையின் கீழான “முஸ்லிம் தனித்துவ அரசியல் அடையாள” கட்சிகள் இன்று அவசரமாகவும் அவசியமாகவும் கட்டியெழுப்பப்பட்டு, நமது அடையாளமாக பதிவு பெறவேண்டும். இதனை நமது சமூக மக்கள் தாமாக உணர்ந்து, தெளிந்து காரியமாற்றத் தொடங்காத நிலை தொடரும் வரை நமது சமூகத்தின் நிலை வீழ்ச்சியை அன்றி வேறில்லை என்பதே இன்றைய யதார்த்தமாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -