ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக, எதிர்வரக்கூடிய தேர்தல்களின் போது பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில கட்சிகளின் செயற்பாடுகள் குறித்தும், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் பல முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இவை குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கும், அரச சேவை ஆணைக்குழுவுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும் அது குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அத்துடன், சில அரச ஊடகங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி பக்கச் சார்பாக செயற்பட்டமை தொடர்பிலான முறைப்பாடுகளை பொலிஸாருக்கும், அரசை சேவை ஆணைக்குழுவுக்கும் பகரம் சாட்டிய போதிலும், அது குறித்தும் இதுவரையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.
குறிப்பாக, சில இலத்திரனியல் ஊடகங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களைக் கூட கருத்தில் கொள்ளத் தவறியிருந்தன என்றார்.