காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறில் புத்தாண்டுச்செய்தி.
காரைதீவு நிருபர் சகா-2020 புத்தாண்டு இலங்கைத்திருநாட்டில் தமிழ்மக்கள் சமஉரிமையுடன் வாழ்வதற்கு வகைசெய்யவேண்டும். தமிழில் தேசியகீதம் பாடுதலுடன் புத்தாண்டு மலரட்டும்.
இவ்வாறு காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள புத்தாண்டுச்செய்தியில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
இயற்கையோடு சங்கமித்து வாழ்ந்துவருபவர்கள் தமிழர்கள். அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக்கோரி போராட்டம் நடாத்தினர். இலங்கைஅரசியல் யாப்பின்படி தமிழ் அரசகருமமொழி என்பதற்கு அப்பால் சுதந்திரம் பெற்ற காலத்திலும் பின்னர் 2015இலிருந்தும் தேசியகீதம் தமிழ்மொழியில் பாடப்பட்டுவந்திருக்கிறது.
ஆனால் இன்று மீண்டும் அதற்குச் சோதனை வந்திருக்கிறது. கூறியவர்கள் கூறவில்லையென்பதும் ஏனையவர்கள் அதற்கு ஆதரவு நல்குவதும் ஆரோக்கியமான வலுவான இனஜக்கியத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பத்தடையாக அமையலாம்.
கடந்த காலங்களில்தமிழ்மக்கள்இந்நாட்டில் அனுபவித்த துன்பதுயரங்கள் சொல்லுந்தரமன்று. அதற்கு ஒரு விடிவு தீர்வு கிடைக்குமுன்பே மற்றுமொரு ஆட்சிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
ஜனாதிபதியின் கன்னிஉரையில் குறிப்பிட்டவாறு இந்நாட்டிலுள்ள சகல இனமக்களையும் ஒரேகண்ணால் பார்த்து அரவணைத்துச்செல்லும் போக்கு இத்தேசியக்கீதம் பாடலிலும் மளிரவேண்டும்.
புத்தாண்டில் வெறுமனே போலிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதைவிட இனஜக்கியத்திற்கான அத்திவாரத்தை தேசியகீதத்திலிருந்து ஆரம்பித்தால் சுபீட்சமான இலங்கையை அனைவரும் இணைந்து கட்டியெழுப்பமுடியும்.