பராமரிப்பு இன்றி காட்சியளிக்கும் மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டடங்கள்

ஐ. ஏ. காதிர் கான்-

லங்கையின் மீன்பிடித் துறைமுகங்களில் பெரும்பாலானவை வினைத்திறனான பராமரிப்பு இன்றி அவற்றின் அலுவலகக் கட்டடங்கள் காட்சியளிக்கிறது. தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான நிலை தொடர்வதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அத்துடன், துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் திட்டமிடப்பட்டுள்ள மீனவர் சமூகப் பெண்களுக்கான சமூக அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன், குறித்த திட்ட வரைபின் இறுதி வடிவத்தை தனக்கு வழங்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதன்போது, அண்மையில் தென்னிலங்கை மீன்பிடித் துறைமுகங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது அவதானித்த விடயங்கள் தொடர்பாகவும் அமைச்சர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
கடந்த காலத்தில் சரியான தலைமைகளின் வழிநடத்தல் இல்லாமையினால் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் தற்போது மோசமான நிலையில் காணப்படுகிறது. இதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிடைக்குமாயின் மீண்டும் சிறந்த நிலைக்குக் கொண்டு வரமுடியும் என்பதுடன், அனைத்து ஊழியர்களுக்கும் அந்தப் பிரயோசனம் கிடைப்பதற்குத் தேவையான அனுமதியை, தன்னால் அமைச்சரவையில் பெற்றுத்தர முடியும்.

மேலும், துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் ரஷ்ய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடமும் தான் கலந்துரையாடியுள்ளேன். அவர்கள் அதற்குச் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அதிகாரிகள், வருடந்தோறும் தமக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதி போதியளவு இல்லாமல் இருப்பதால், திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகத் தெரிவித்தனர். 

இதேவேளை, பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நீர்மூழ்கிப் பணியாளர்களும் இல்லாமையினால், துறைமுகங்களில் தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இவை தொடர்பாகக் கவனம் செலுத்திய அமைச்சர், குறித்த வெற்றிடங்கள் தொடர்பிலான கோரிக்கையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும், இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்குத் தேவையான அனுமதிகளை உடனடியாகப் பெற்றுத்தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -