வளைகுடா நாடுகளின் இயற்கை வளங்கள் உலக போக்குவரத்தின் பெரும்பகுதிக்கு பங்களிக்காவிட்டால் இப்பிராந்தியம் எவராலும் கவரப்பட்டிருக்காது. இது மட்டுமல்ல இந்நாடுகளை அண்டியுள்ள பாரசீக, அரேபியன் கடற்பிராந்தியங்கள் சர்வதேச கப்பல் போக்குவரத்தில் வகிக்கும் பங்குகளும் உலகின் கவனத்தை இங்கு ஈர்த்துள்ளது. மேலும் உலகின் பிரதான மதங்கள் மூன்றின் பிறப்பிடங்களுக்கும் இப்பிராந்தியம் சொந்தமாகியுள்ளது. இந்நிலையில் சாதாரண விசைப்படகு தொட்டு விமானம் வரைக்கும் தேவைப்படும் எரிபொருட்களின் எண்பது வீதம் இந்த வளைகுடா நாடுகளுக்கு ஆண்டவன் கொடுத்த அருட்கொடை. இவைகள்தான் மத்திய கிழக்கில் நீண்ட விரிசல்களை வளர்க்கின்றன.
இப்பிராந்தியத்தில் பிறந்த யூதம், கிறிஸ்தவம், இஸ்லாமிய மதங்களின் ஓரிறைக் கோட்பாடுகள் மறக்கடிக்கப்படுமள வுக்கு லௌகீகத்தின் சொத்துக்கள் விரிந்து கிடக்கும் பிராந்தியமும் இதுதான்.இந்த சொத்துக்களின் ஏகபோக உரிமைகளைப் பங்கிடுவதில் ஏற்பட்ட போட்டிகள், இன்று நேற்றல்ல என்றிருந்தோ ஆரம்பமான துயரம். மத்திய கிழக்கின் கட்டுப்பாட்டை, தம்வசம் வைத்து மேலைத்தேய நாடுகளை மண்டியிடத் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் சக நாடுகளைக் கொண்டு தவிடுபொடியாக்கப்படுவது தான் இப்பகுதிக்குள்ள விசித்திரம்.ஈராக் ஜனாதிபதி சதாம்ஹுஸைன்,லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி உள்ளிட்ட பலர் இங்குள்ள எரிபொருள், எரிவாயு, வளங்களைப் பயன்படுத்தி எதிரிகளைக் கட்டுப்படுத்த வகுத்த திட்டங்களைத் தோற்கடிப்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் வெற்றி பெற்ற காலத்திலிருந்து இங்குள்ள விரிசல்கள் மேலும் வீரியமடைந்தன. இவ்வாறான திட்டங்கள் இனியும் வகுக்கப்படக் கூடாதென்பதற்காகவே முஸ்லிம்களின் மத பின்பற்றல் நம்பிக்கைகளுக்கு வெவ்வேறு வியாக்கியானங்கள் வழங்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறது. ஏகத்துவ இறை கோட்பாடுகளில் முஸ்லிம்களை பிரிக்கமுடியாதெனத் தௌிவாக விளங்கிக் கொண்ட எதிரிகள், சமயத்தை அடியொற்றும் முஸ்லிம்களின் நடைமுறை நம்பிக்கைகளைத் திசை திருப்பிவிட்டனர். பொதுவாக எதிரிகளின் இந்த மூளைச்சலவைகள் தோற்கடிக்கப்படும் வரையிலும் ஈரானின் "குத்ஸ்" படை இராணுவத் தளபதி குவாஸிம் சுலைமானி போன்றோரின் உயிரிழப்புக்களை முஸ்லிம் உலகத்தால் தவிர்க்க முடியாது. இவர் தாக்கப்பட்டதேன்?ரஷ்யா,சீனா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகள் கண்டித்ததும் ஏன்?இன்று அரபு நாடுகள் உட்பட இஸ்லாமிய நாடுகளில் புரட்சிகள் வெடிப்பதேன்?எதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட மூளைச் சலவைகளின் எதிரொலிகளா இவை? சதாம்ஹூஸைன்
தூக்கிலிடப்பட்டமை, கடாபி கொல்லப்பட்டு குளிர் சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டவற்றை எல்லாம் சர்வாதிகாரிகளின் மரணங்கள் என முஸ்லிம்களுக்கு மூளைச்சலவை செய்தவர்கள் யார்?
சதாம் ஹுஸைன்
தூக்கிலிடப்பட்ட 2006. 12. 30 ஆம் திகதிய செய்தி,படத்தை சவூதி அரேபியாவின் "அரப்நியூஸ்" பத்திரிகை ஒரு மூலையில் பிரசுரித்ததை ஊடகவியலாளர் நண்பர்களுடன் புனித ஹஜ்ஜுக்குச் சென்ற எனக்கும் அரபா தினத்தில் பார்க்க கிடைத்தது. இப்போது ஈரானின் "குத்ஸ்" படைப் பிரிவின் தலைவர் கொல்லப்படுவதை அமெரிக்கா ஏன் விரும்பியது? அமெரிக்கா மட்டுமல்ல 2007 ஆம் ஆண்டு பிரிட்டனும் குவாஸிம் சுலைமானியை குறிவைத்ததே! எதற்காக? ஈரான் ஆத்மீகத் தலைவர் ஆயதுல்லா கொமய்னியால் உருவாக்கப்பட்டதுதான் இந்த குத்ஸ் படைப்பிரிவு. இப்பிராந்தியத்தில் பிறந்த மற்றொரு மதமான யூதர்களின் பிடியிலுள்ள "பைத்துல் முகத்தஸ்" முஸ்லிம்களின் முதலாவது கிப்லா (தொழுகைக்காக நோக்கும் திசை) மீட்டெடுக்கவே குத்ஸ் இராணுவ உளவுப் பிரிவு உருவானது. ஜெரூஸலம் உண்மையில் இப்பிராந்தியத்தில் பிறந்த மூன்று மத நம்பிக்கைகளுடனும் தொடர்புறும் ஒரு புனிதஸ்தலம். இறைதூதர்களான மூஸா (மோஸே) ஈஸா (இயேசு) முஹம்மத் (அஹ்மத்) ஆகியோரின் ஆத்மீக வாழ்க்கை, வரலாறுகள் இந்த வழிபாட்டுத் தலத்துடன் தொடர்புபட்டவை. இப்போது இது யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை வேறு வடிவமாகியுள்ளதே அரசியல், இராணுவ, பொருளாதார பதற்றத்தை, இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ஈரான்- ஈராக் போர், வளைகுடா யுத்தம், டுனூஸியாவில் ஏற்பட்ட அரபு வசந்தப்புரட்சி, அதன் பின்னரான சிரிய யுத்தம் என்றாகி வளைகுடாவின் தற்போதைய பதற்றமாக ஈரான் உருவெடுத்துள்ளது.
மத்திய கிழக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும்) ஈரானின் திட்டத்தை தகர்ப்பதில் எப்போதுமே கவனமாக உள்ள அமெரிக்கா, ஈரானின் எந்த முயற்சிகளையும் வெற்றியளிக்க விடுவதில்லை. இவ்வாறான முயற்சிகள் முட்டுக் கட்டைகளால் முடக்கப்படும். எல்லையில்லா பொருளாதாரத் தடைகைள எதிர் கொண்ட ஈரானில் ஒரு காலத்தில் விமான விபத்துக்கள் அதிகம் நிகழ்ந்தன. தரமான விமான உதிரிப்பாகங்களைப் பெறுவதில் ஏற்பட்டிருந்த தடைகளே இவ்விபத்துக்களை ஏற்படுத்தியது. மேலும் யுரேனியத்தை செறிவூட்டி அணுவாயுதம் தயாரிக்கும் முயற்சிகளையும் முடக்கியது அமெரிக்கா.
இதனால்தான் ஐநா வின் அறிவுறுத்தலுக்கு 2015 இல் இணங்கிய ஈரான் யுரேனியம் செறிவூட்டலை 3.06 வீதத்தால் மட்டுப்படுத்தியது.
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம்ஹுஸைனின் மறைவுக்குப் பின்னர் ஈராக்கில் காலூன்றல், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் வாழும் ஷியா முஸ்லி ம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேசத்தை உருவாக்கும் நோக்குடன் ஈரான் செயற்படுவதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் தனக்குத்தோதான தோழர்களை தோளில் சுமந்து அரபு நலன்களின் ஆதாயங்களைக் கறந்தெடுப்பதாக ஈரான்
கருதுகிறது. இதனால் ஈரானின் எத்தனையோ விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விஞ்ஞானத்துறை விரிவுரையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஏன்? ஈரானிலிருந்து புனித ஹஜ்ஜுக்குச் சென்ற எத்தனையோ மூளைசாலிகள் காணாமலாக்கப்ப ட்டனர்.இப்போது இந்த சர்ச்சையின் சந்தியில் குவாஸிம் சுலைமானி குறிவைக்கப்பட்டுள்ளார்.
இதனால் வளைகுடாக் கடல்கள், வான்பரப்புக்கள், நிலங்கள் இந்த வேளையிலும் தீப்பிளம்பாகியுள்ளன. அமெரிக்காவின் 35 இலக்குகள் தகர்க்கப்படுமென ஈரானும், ஈரானின் 52 நலன்களை குறிவைப்போமென அமெரிக்காவும் விடுக்கும் எச்சரிக்கைகள் எத்தனை அப்பாவிகளைக் கொல்லுமோ? எத்தனை குழந்தைகளைக் குற்றுயிராக்குமோ? சொத்துக்களின் அழிவுகள் எத்தனை கோடிகளைத் தாண்டுமோ? போரில்தான் பார்க்க முடியும்.இத்தனைக்கும் ஈராக்கிலுள்ள அமெரிக் கப்படைகள் அனைத்தும் வௌியேற வேண்டுமென அந்நாட்டின் பாராளுமன்றம் எடுத்துள்ள தீர்மானத்தை ஏறெடுத்தும் பார்க்காத அமெரிக்கா, ஈராக்கில் நிர்மாணிக் கப்படும் கப்பல் கட்டும் தளத்துக்கான செலவுகள் மற்றும் இதுவரை காலமும் வழங்கிய உதவிகளை ஈராக் திருப்பித் தரவேண்டுமென்கிறது.இங்குதான் இருக்கப் போகிறாயா? அப்படியானால் "யுரேனியம் செறிவூட்டலின் தரத்தை எண்பது வீதமாக உயர்த்தப்போகிறேன்.5060 கியூபிக் எரிபொருளுக்குப் பதிலாக 19,000 கியூபிக் சுப்பர் பெற்றோலை செறிவூட்டுவேன்" என எச்சரிக்கிறது ஈரான். இத்தோடு நின்றுவிடாது டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவருக்கு 1445 கோடி டொலர் சன்மானம் தருவதாகவும் அறிவித்துள்ளது.