ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் முஸ்லிம்களுக்கு சிறந்த சந்தர்ப்பமாகும். இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், முஸ்லிம்கள் மிகச் சாதுர்யமாக நடந்துகொண்டு, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது முழு அளவிலான ஆதரவுகளை வழங்க முன்வர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொலன்னாவ மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று, அண்மையில் கொலன்னாவ வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கெளரவ அதிதியாகக் கலந்து கொண்டு கருத்துரை வழங்கும்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, உலமாக் கட்சித் தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத், பிவிதுரு ஹெல உறுமயத் தலைவர் உதய கம்மன்பில, கொலன்னாவ ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஹனீப் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பைஸர் முஸ்தபா எம்.பி. தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,
எம்மை முன்னோக்கி பொதுத் தேர்தல் ஒன்று வருகிறது. இத்தேர்தலில் முஸ்லிம்கள் தங்களது ஆளுமையை வெளிக்காட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் நடந்துகொண்டது போல் செயற்படக் கூடாது. முஸ்லிம் சமூகம் தமது சமூகப் பிரச்சினைகளை அணுகுவதில் உணர்ச்சி பூர்வமாக அன்றி உணர்வு பூர்வமாக இத்தருணத்தில் சிந்தித்து செயற்படுவது அவசியம். அத்துடன், இலங்கை நாட்டில் ஏனைய சமூகங்களின் உள்ளங்களை வெல்வதன் மூலம், எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியமாகும்.
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று பிரசாரம் மேற்கொண்டவர்கள், இன்று தோற்றுப்போய் விட்டனர். இதேபோல், எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்பு முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்று முஸ்லிம், தமிழ் சமூகங்களை அச்சமிக்க மன நிலையில் வைத்து அரசியல் செய்ய முற்படுகின்றனர். இந்நிலையில், முஸ்லிம் தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் தற்போது முஸ்லிம் சமூகத்தைக் கைவிட்டுள்ளனர். இனிமேல் அவர்களிடம் போய், எமக்கு எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, முஸ்லிம்கள் இவ்வாறான தலைவர்களின் அரசியலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அவர் முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார். ஜனாதிபதி சிறந்ததோர் நிர்வாகி. அவர் தன்னை ஒரு அரசியல்வாதியாகக் காட்டிக் கொள்வதை விட, ஒரு சிறந்த ஆளுமை மிக்க நிர்வாகியாகக் காட்டிக்கொள்ள விரும்புபவர். தற்போது ஜனாதிபதியினால் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைத் திட்டங்கள் மிகவும் கச்சிதமாகவும் நுணுக்கமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, இனிமேலும் முஸ்லிம் சமூகம், தம்மைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்துக் கொள்ளாமல், ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் விசுவாசமானவர்களாக நடந்துகொள்ள முன்வர வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் சுயநல அரசியல் சமூகத்தைப் பின்னடையச் செய்துள்ள நிலையில், முஸ்லிம்களையும் முஸ்லிம் இளைஞர்களையும் நேரான வழியில் வழி நடத்த வேண்டியது மிக முக்கிய பொறுப்பாகும் என்றார்.