ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் எண்ணக்கருவில் உதித்த சுபீட்சமான இலங்கை, இனவாதமற்ற அரசியல் போன்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமாக இருந்தால், நாட்டில் வாழுகின்ற அனைத்து சமூகங்களினதும் மத கலாசார உரிமைகளை செயற்படுத்தக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, விசேட ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடும்போது,
அத்துரலியே ரத்ன தேரரினால் முஸ்லிம் விவாக, விவாகரத்து தனியார் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பிரேரணை, ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணாக இருப்பதாகவே, நாம் கருதுகின்றோம்.
எனவே, இந்தப் பிரேரணையை ரத்ன தேரர் மீளப்பெற வேண்டும் என்பதோடு, இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வருமாக இருந்தால், பல்லினச் சூழலை அனுமதிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இப்பிரேரணையைத் தோற்கடிக்க வேண்டும் என்று, முஸ்லிம் சமூகம் சார்பாக நான் வேண்டிக் கொள்கின்றேன். அத்துடன், இது விடயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல், தலைமைத்துவ, கட்சி, கொள்கை பேதங்களை மறந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவதற்காகவும், பொதுக் கட்டளைச் சட்டத்திலும் மாற்றம் வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் பாராளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்று (08) புதன்கிழமை சமர்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், அன்றைய தினமே எனது தலைமையில் முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பலரும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வாவை, நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினோம். இதன்போது, இவ்வாறான தனிநபர் சட்ட மூலமொன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், முஸ்லிம் சமூகத்துக்கு எவ்விதப் பாதிப்புக்களும் இல்லாத வகையில் தீர்வு காணப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
ஏற்கனவே கடந்த ஆட்சிக்காலத்தில், முஸ்லிம்களின் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக, முஸ்லிம் சமூகத்திலுள்ள சிவில் அமைப்புக்களினாலும் புத்திஜீவிகளினாலும் தயாரிக்கப்பட்ட பிரேரணைகள், நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தினுடைய மார்க்க விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள், அச்சமூகத்தின் பங்குபற்றுதலுடனும், அனுமதியுடனுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டம் என்பது, இலங்கை போன்ற பல்லினச் சூழலில் ஒவ்வொரு சமூகத்தினுடைய மத மற்றும் தனியான அடையாளங்களை மதித்து காலனித்துவ அரசாங்கங்களினாலும், சுதந்திரத்தின் பின்னரான அரசுகளினாலும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள ஒரு விடயமாகும்.
இது, முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் கொடுக்கப்பட்ட விசேடமான அனுமதியாகக் கருத முடியாது. நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுக்கும் இவ்வாரான விசேட சட்ட ஒழுங்குகள் பொதுச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தேச வளமைச் சட்டம், கண்டிய சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இதன் மூலம், முஸ்லிம் சமூகம் விவாகம், விவாகரத்து மற்றும் ஏனைய கடமைகளை இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் வாழ்வதற்கு உதவியாக இருக்கின்றது. இதனை நீக்க வேண்டும் என்பது, முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருப்பதோடு, முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளையும் அது பாதிப்பதாக அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.